Tamilnadu
“சுதந்திர இந்தியாவில் ரௌலட் சட்டத்தின் பிரதிபலிப்பான ‘தேசத் துரோகச் சட்டங்கள்’ தேவையா?” : முரசொலி கேள்வி!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 21,2021) தலையங்கம் வருமாறு: -
சுதந்திரப் போராட்டத் தலைவர்களை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோகச் சட்டம், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்தும் தொடர வேண்டுமா?” என்ற கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளார்கள். தொடர வேண்டாம் என்பதுதான் அரசியல் சிந்தனையாளர்கள், ஜனநாயக சக்திகள், மனித உரிமையாளர்களின் பதிலாக இருக்க முடியும்!
இந்தியாவைப் பறித்துக் கொண்டு ஆண்டது பிரிட்டிஷ். அந்த பிரிட்டிஷ் அரசு, தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேசத்தை எதிர்ப்பவர்களாகக் குற்றம் சாட்டியது. அதனால் தான் இந்தச் சட்டத்தின்படி காந்தி கைதானார். கோகலே கைதானார். திலகர் கைதானார். வ.உ.சி கைதானார். அதாவது இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் அனைவரையும், ‘தேசத்துரோகிகள்' என்று குற்றம் சாட்டுவதற்கு ஒரு சட்டம் வைத்திருந்தார்கள்.
அதுதான் இந்திய தண்டனைச் சட்டத்தில் 124 - ஏ பிரிவாகும். அரசாங்கத்துக்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் அனைவரையும் இந்தச் சட்டத்தின் படி கைது செய்யலாம். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரைக்கும் தரலாம். அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கருத்துச் சொல்வதே தேசத்தைக் குலைப்பதாக இச்சட்டத்தை வைத்து குறி வைக்கலாம்.
சமீபத்திய உதாரணம், ஒன்றிய அரசின் மக்கள் விரோத விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வடமாநிலத்தில் இப்போராட்டம் வலுவாக இருக்கிறது. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க அரசைச் சேர்ந்த முதலமைச்சர், அமைச்சர்கள் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாயிகள்.
ஹரியானா மாநில துணை சபாநாயகர் ரன்பீர் காங்க்வா சென்ற காரை விவசாயிகள் மறித்தார்கள். அந்த 100 விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கு தனியாகவும் போடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் தேசத் துரோக வழக்கு எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுதான் உதாரணம்.
இதைத்தான் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம், முன்னாள் ராணுவ அதிகாரியான எஸ்.ஜி.வோம்பாத்கரே ஆகியோர் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. “அடிப்படை உரிமையான கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்துக்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கும் வகையில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் உள்ளது.
அதனால் இந்த 124 ஏ பிரிவை முழுமையாக நீக்க வேண்டும். அல்லது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது இந்தச் சட்டப்பிரிவு. இது இந்தக் காலக்கட்டத்துக்குப் பொருந்தாது என்று சொல்ல வேண்டும்” என்று முன்னாள் ராணுவ அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனு மீதான விசாரணையில் தான் தலைமை நீதிபதி அமர்வு மிகத் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளது.
“காந்தி உள்ளிட்ட நம்முடைய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது இந்தச் சட்டம். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இது தேவையா? பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் இந்தச் சட்டம் தேவையா? காலனி ஆட்சி காலச்சட்டம் இப்போதும் தேவையா? பல பழைய தேவையில்லாத சட்டங்களை நீக்கி இருக்கிறது மத்திய அரசு. ஆனால் இந்தச் சட்டத்தை மட்டும் ஏன் நீக்கவில்லை? பல நேரங்களில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மரத்தைத் துண்டாக்க ஒருவரிடம் கொடுக்கப்பட்ட ரம்பத்தால் ஒரு காட்டையே அழிப்பதைப் போலத்தான் இந்த தேசத் துரோகச் சட்டத்தின் செயல்பாடும் உள்ளது. யாரையாவது பிடிக்காவிட்டால், யார் மீது யார் புகார் சொன்னாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியும். ஒரு கிராமவாசி ஒருவரை, அந்த ஊர் போலீஸ்காரருக்கு பிடிக்கவில்லை என்றால் கூட இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும்.
எங்களது முக்கியமான அச்சம், இந்தச் சட்டம் எந்த வகையில் எல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றித்தான். இந்தச் சட்டத்தை ஏன் நீக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி அமர்வு கூறி இருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் எழுப்பப்பட்ட தலைசிறந்த கேள்விகளில் இதுவும் ஒன்று. “எத்தனை எளிய மக்கள் இந்தக் கொடுமையால் சிக்கி பாதிக்கப்பட்ட நிலை உள்ளது. இதுபற்றி யாரும் கேட்பதே இல்லை. (‘‘No accountability for all this’’) என்ற நிலைதானே நாட்டில் உள்ளது.’’ - என்று நீதிபதிகளே சொல்லி இருக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு முதல் போடப்பட்ட 93 வழக்குகளில் 17 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் 3.3 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனைகள் தரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகளே சொல்லி இருக்கிறார்கள் என்றால் இது எந்தளவுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. ஆந்திராவில் இரண்டு தொலைக்காட்சிகள் மீதே இந்தச் சட்டம் பாய்ச்சப்பட்டது.
இந்த தேசத் துரோக வழக்குகள் அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டு வருவதை பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் உடைத்துள்ளது. ரௌலட் சட்டம் வந்தபோது அந்தச் சட்டத்துக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டினார் அண்ணல் காந்தி. அந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்துப் பெற்றார். ‘சுதந்திரக் கொள்கையையும் நீதியையும் பாதிப்பதாக இவை இருப்பதோடு, சமூகத்தின் பாதுகாப்புக்கு வேண்டிய தனிப்பட்டவர்களின் மனித உரிமைகளையும் பாதிப்பதாக இவை இருக்கின்றன' என்ற சொற்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
ரௌலட் சட்ட விவாதம் நடந்த போது இந்திய சட்டசபைக்கு (இன்றைய இந்திய நாடாளுமன்றம் அந்தக் காலத்தில் அப்படித்தான் அழைக்கப்பட்டது) சென்று பார்வையாளர் மாடத்தில் உட்கார்ந்திருந்தார் காந்தி. தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் இந்திய சட்டசபைக்குள் போய் விவாதத்தை கவனித்தகாக காந்தி எழுதி இருக்கிறார். அவராலும் ஏராளமான தியாகிகளாலும் பெற்ற சுதந்திரக் காலத்திலும் ரௌலட் சட்டத்தின் பிரதிபலிப்பான சட்டங்கள் இருக்கலாமா?
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?