Tamilnadu

'இதுவும் பாசம்தான்'.. மரத்தில் சிக்கிய காகத்தின் உயிரை காப்பாற்றிய சிறுவன்: சென்னையில் நடந்த நெகிழ்ச்சி!

சென்னை அடுத்த அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சஞ்சீவ் இன்று காலை தனது வீட்டின் மாடியில் யோகா பயிற்சி செய்வதற்காகச் சென்றுள்ளான். அப்போது வீட்டின் அருகே இருந்த மரத்தில் காகம் கரையும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுள்ளது.

இதையடுத்து சஞ்சீவ் மரத்தின் அருகே சென்று பார்த்தபோது, மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்ட காகம் ஒன்று பறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.

பின்னர் சிறுவன் சஞ்சீவ் நடந்தே காரப்பாக்கத்தில் உள்ள போலிஸ் சோதனை சாவடிக்குச் சென்று, மரத்தில் காகம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனை மீட்க வேண்டும் என கோரி போலிஸாரை கையோடு சம்பவ இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறான். பிறகு போலிஸார் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மரந்தின் மேல் ஏறி மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காகத்தை மீட்டனர். பின்னர் அதற்கு முதலுதவி செய்து அதை சுதந்திரமாகப் பரக்க விட்டனர்.

காகம் தானே அது எப்படிப் போனால் எனக்கு என்ன என்று இருக்காமல், போலிஸாரை அழைத்து வந்து காக்கையின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் சஞ்சீவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Also Read: ஆண்டு முழுவதும் ஒரு முட்டை ரூ.2.40க்கு விற்பனை செய்வது சாத்தியமா..? - சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்!