Tamilnadu

ஆண்டு முழுவதும் ஒரு முட்டை ரூ.2.40க்கு விற்பனை செய்வது சாத்தியமா..? - சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்!

ஆந்திர மாநிலத்தில் போலி முட்டைகள் விற்று மக்களை ஏமாற்றிய நிலையில், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் ஒரே விலைக்கு முட்டை விற்கப்படும் என நாளேடுகளில் வெளிவந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rafoll Retails என்ற நிறுவனம் 700 ரூபாய் செலுத்தினால் வருடந்தோறும் ரூபாய் 2.40 பைசாவுக்கு முட்டை என்றும் வாரந்தோறும் ஆறு முட்டைகள் என வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும் என்றும் நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூபாய் 1,400 கட்டினால் வாரத்திற்கு 12 முட்டைகளும், 2,800 ரூபாய் கட்டினால் வாரத்திற்கு 24 முட்டைகள் தரப்படும் எனவும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இச்சலுகை முதலில் பதிவு செய்யும் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போலி முட்டைகள், பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்படுவதாகத் தொடர்ச்சியாகச் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் Rafoll retails நிறுவனத்தின் இந்த விளம்பரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விலைக்கு முட்டையை விற்பனை செய்ய முடியாது என்றும் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு முட்டைக்கான உற்பத்தி விலையே 3 ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில் ரூபாய் 2.40 பைசாவுக்கு முட்டை கொடுக்கப்படும் என அறிவிப்பது எல்லாம் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும் என்றும் இதனை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்த நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளது. அப்போது அவர்கள், நேரில் வந்தால் மட்டுமே எங்கள் திட்டங்களை விளக்க முடியும் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளனர்.

இந்நிலையில், ஆண்டு முழுவதும் ஒரே விலையில் முட்டை வழங்கப்படும் என நாளேடுகளில் வந்த விளம்பரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Also Read: “சங்கடமா இருக்கு நண்பர்களே... பணம் அனுப்பிய பிறகு பதிலே இல்ல” - இன்ஸ்டாகிராம் மோசடியால் கொதித்த நடிகை!