Tamilnadu
“கொக்கென்று நினைத்தீரோ கொங்குநாட்டை... நேர்வழியில் உழையுங்கள்” - இயக்குனர் வே.ஸ்ரீராம் சர்மா கட்டுரை!
கடந்த சில நாட்களாக பத்திரிகைச் செய்தி ஒன்றுக்கு பாத்தி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். படரெல்லாம் படைத்த கைகேயியைப் போல பழிவளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொங்கு மக்களின் தாய்மண் பற்றைத்தவறாக எடைபோட்டு விட்டார்கள்!
தீரன் சின்னமலை ம்யூஸிக்கல் தியேட்டர் ஆய்வுக்காகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரலாறு முதல் இன்றுவரை கொங்கு மண்ணை, அந்த மண்ணின் மாந்தர்களை நெருங்கிக் கண்டவன் என்னும் வகையில் நான் கண்ட சில உண்மைகளை இங்கு சொல்வேன்.
அவர்கள் அல்லையும் பகலாக்கும் கடும் உழைப்பாளிகள். விவரத்தோடு உயர விரும்பும் பிழைப்பாளிகள். மாற்றார் மனம் நோகும் எனில் அந்தச் செயலைக் கனவிலும் செய்ய அஞ்சுபவர்கள். பழனி முருகனின் பதம் தோய்பவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களைக் கொண்டு அம்மன் கோயிலுக்குள் தஞ்சமடைபவர்கள்.
கம்பரின், ‘நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்…’ எனத் தொடங்கும் மங்கல வாழ்த்தைப் பாடியே தாலியேற்றுவார்கள்! தமிழை, தாய் நாட்டைத் தங்கள் உயிருக்கு நிகராகக் கொள்பவர்கள். எந்த காரணம் கொண்டும் அதை விட்டுக் கொடுக்க விரும்பாதவர்கள். விசுவாசம் என்பதை இயல்பிலேயே கொண்டிருப்பவர்கள்.
ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆன பின்பும் ‘அம்மாச்சி’ என்றுதான் அழைப்பார்கள். தொழில் நுணுக்கங்களில் மேதைமை காண்பதை தங்கள் குலப் பெருமையாக எண்ணிக்கொள்பவர்கள்.
திரைத்துறையில் வியக்கத்தக்க கலைஞர்களாகவும், படைப்பாளிகளாகவும் மின்னுவார்கள் என்றாலும் – முதலீட்டாளர்களுக்கு லாபம் செய்து கொடுக்கவே விரும்புவார்கள். சுருங்கச் சொன்னால், பட்டம் பெறாத கறாரான சமூக ஆடிட்டர்கள்!
பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் மண்ணை அடிமைப்படுத்தியவன் கிழக்கிந்திய வியாபாரி! வியாபாரியை, வியாபாரம் கொண்டே வீழ்த்த வேண்டும் என அன்றிலிருந்தே அடிபட்டு அடிபட்டுக் கற்ற மரபுவழிப் பாடங்கள்தாம் இன்றளவும் அவர்களுக்குத் துணையாக நிற்கின்றன என்றே நான் புரிந்துகொள்கிறேன்!
அந்த செறிந்த தொழில் வாழ்வின் பயனைத்தான் இன்று தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆகச் சிறந்த கொடையாக அளித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கொங்கு மண்!
நடிகரும் – பெரும் பேச்சாளருமான சிவகுமார் அவர்களின் ‘கொங்குத்தேன்’ என்னும் தொடரைப் படித்தால் அந்த மக்களின் ஒட்டுமொத்த நெகிழ்ந்த வாழ்வும் நமக்குப் புரிபட்டுப் போகும்.
அப்படிப்பட்ட மண்ணை நோக்கித்தான், அந்த மாந்தர்களை நோக்கித்தான் ‘கொங்கு மாநிலம்’ என்னும் கலக அம்புகள் பாயப் புறப்பட்டிருக்கின்றன. என்னளவில் பட்டெனச் சொல்லிவிடுகிறேன் அது நடக்கவே நடக்காது!
தமிழர்களிடையே மன மாச்சரியத்தை ஏற்படுத்தும் நபும்சக நாடகம் அது. அப்பாவி மக்களை மனதளவில் அடித்துக் கொள்ள வைக்கும் சகித்துக் கொள்ளவே முடியாத பார்பாரிஸம் அது!
பசு மாட்டை நடுச்சாலையில் கிடத்தி அதன் வயிற்றைப் பட்டாக்கத்தியால் வெட்டுவதற்கு இணையான அராஜகம் அது! பட்டை வெயிலில் தூக்கில் தொங்குபவன் காண முயலும் கனவு அது!
குறித்துக் கொள்ளுங்கள், தமிழரிடையே பேதம் உண்டாக்க எவர் முனைந்தாலும் முடிவில் அது அவர்களுக்குத்தான் அழிவைத் தரும்.
கொங்கு என்பது தமிழ்த்தாய் விரலில் மின்னும் தங்க மோதிரம்! தமிழ்த்தாய்க்கு மூக்குத்தியும் உண்டு. அதனை, நிரடிப் பார்க்க விரும்பும் அந்த மோதிர விரலை முறித்துவிட நினைப்பது பெரும் பாவம். துரோகம்!
வரலாற்று ஆய்வாளரும் – பதிப்பாளருமான தோழர் ஸ்டாலின் குணசேகரன், தனது ஈரோடு புத்தகத் திருவிழாவினை அன்று, ‘ஈரோடு வாசிக்கிறது’ என்பதாகத்தான் தொடங்கினார்.
அடுத்து, ‘கொங்கு மண்டலம் அறிவுக் களஞ்சியம்’ என மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மெல்ல அதிகரித்தார். இன்று, ‘தமிழ்நாடு வாசிக்கிறது’ என்னும் பதாகையைத் தாங்கிப் பிடிக்கிறார் என்றால் அவரது நகர்வும் - நோக்கமும் அகண்ட தமிழ்கூறும் நல்லுலகத்தை நோக்கியே என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும் இன்றைய மதர்ப்பாளர்கள்.
கொங்குநாடு என்னும் பெயரில் கட்சியே வைத்திருக்கிறாரே ஈஸ்வரன் என்கிறார்கள் சிலர். ஐயகோ, அவர்களை என்ன சொல்லித் தேற்றுவது?
கொங்கு ஈஸ்வரன் செய்வது ‘கவன ஈர்ப்பே’ அன்றி ‘கலகம்’ அல்ல என்பதை என்று உணரப் போகிறார்கள்?
‘கொங்கு மண்ணை மேலும் பல மாவட்டங்களாகப் பிரியுங்கள்…’ என்று கூடத்தான் கேட்கிறார் கொங்கு நாடு ஈஸ்வரன். அது, ஆட்சிமுறை குறித்த கோரிக்கைத்தானே அன்றி, பிரித்தடிக்கும் கலக நோக்கமல்லவே!
குறித்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டைப் பிளப்பதைக் கனவிலும் ஏற்க மாட்டார்கள் தமிழர்கள். தமிழ்நாடாக இருக்கும் நிலையிலேயே இந்த அடி அடிப்பவர்கள் இன்னும் சிதைந்தால் எந்த அடி அடிப்பார்களோ என சிந்திக்க மாட்டார்களா?
கொங்கு மண்டலத்துக்கு மனத்தாங்கல்கள் உண்டு என்பதை தேர்தல் முடிவுகளே காட்டிக் கொடுத்து விட்டது இன்றைய முதலமைச்சருக்கு! வாக்களிக்காத மக்களுக்கு ஓரவஞ்சனை செய்வது காழ்ப்பு அரசியல்!
ஆனால், இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களோ, எல்லோரும் நம்முடன் இருக்க, கொங்கு மக்கள் மட்டும் நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணம் எதுவென நிதானமாக அலசுங்கள் என்கிறார். கொங்கு மக்களின் மனங்களையும் வென்றெடுக்க ஆவன செய்யுங்கள் என்கிறார். அதுதான் ஒன்றுபட்ட நல்லரசியல் என எடுத்துச் சொல்லி அதற்கெனத் தனிக் குழுவினையும் அமைத்திருக்கிறார்.
முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு நேரிடை சாட்சியாக நிற்கிறார் கொங்கு ஈஸ்வரன். அவர், இந்த ஆட்சியை முழுமையாக நம்புகிறேன் என்கிறார். இப்படியான நம்பிக்கையும் - அரவணைப்பும்தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும்!
பாரதியும் - கவிமணியும் பிறந்த தமிழ்நாட்டின் தேச விசுவாசம் குறித்து கவலைப்பட்டுக் காட்டுவது அதீதம். அபத்தம். அநாவசியம்.
ஐயன்மாரே, தயைகூர்ந்து கேளுங்கள்… கடைக்கோடி கடலோர மாநிலமான தமிழ்நாட்டை பலவீனப்படுத்துவது இந்தியத்துக்கு நல்லதல்ல. அது அந்நியரின் ஆசைக் கனவுகளுக்கு வழி வகுத்துவிடும். குறித்துக்கொள்ளுங்கள், ஒன்றியம் என்ற சொல் சட்டத்துக்கு உட்பட்ட சொல்லாகும். அது, குற்றமல்ல! ஆனால், அப்பாவி மக்களிடம் பேதம் உண்டாக்க முனையும் எந்தச் செயலும் குற்றம்தான்! குற்றம்தான்!
இது போன்ற பேதங்களுக்குப் போகப் போக பல வால்கள் முளைக்கும். அதில், ஏதோ ஒரு வாலின் நுனியை அந்த டிராகன் தன் வாலை நீட்டி நக்கக்கூடும். நஞ்சு பாய்ந்தபின் அங்கலாய்த்துப் பயனில்லை.
இங்கிருக்கும் உங்கள் தலைமைகளுக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதை எடுத்துச் சொன்னால் அது பதமாக இருக்காது. போகட்டும். அனைத்துக்கும் காரணமான தமிழ்நாட்டின் முன்னாள் பா.ஜ.க தலைவர், இன்றைய ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் அந்தக் கலகத்தை ‘CLERICAL MISTAKE’ என இரட்டை ஆங்கிலச் சொல்லில் முடித்துக்கொண்டார். நல்லது!
அதே அக்கறையோடு, இணை அமைச்சரின் ‘ BIO DATA ’வுக்குள்ளேயே புகுந்து மிஸ்டேக் செய்ய வல்ல அந்த அப்பாடக்கர் ‘ CLERK ’ யார் எனக் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கையும் எடுத்து விட்டால் நலம்!
நேர்வழி கொண்டு, தங்கள் அரசியல் எண்ணங்களை கிராமம் கிராமமாக ஓடி எடுத்துச் சொல்லி, அதை மக்கள் முழுமையாக நம்பும் வரை பொறுமையாக உழைப்பதுதான் சரியான அரசியல் பலனைத் தரும்.
ஒருவேளை, அந்த அப்பாடக்கர் ‘CLERK ’ மீண்டும் அமைச்சரை ஏமாற்றி விட்டு இந்த மண்ணை இரண்டாகப் பிளந்துவிட்டால் என்ன ஆகும்? இரண்டு திராவிட முதலமைச்சர்கள் அமைவது நிச்சயம்! மக்கள் மனதை கொள்ளாதவரை, இந்த மண்ணை இரண்டு அல்ல - இருபது அல்ல - இருநூறாக உடைத்தாலும் அதுதான் நடக்கும்!
- வே.ஸ்ரீராம் சர்மா
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
நன்றி: மின்னம்பலம்
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!