Tamilnadu
சென்னை ஏர்போர்ட்டில் தலைவர்கள் பெயர்களை மீண்டும் இடம்பெறச் செய்க - ஒன்றிய அமைச்சரிடம் வைகோ வேண்டுகோள்!
ஒன்றிய அரசின், வான் ஊர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று (19.07.2021) மாலை 4.30 மணிக்கு, டெல்லி ராஜீவ் காந்தி பவனில் உள்ள, அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். அமைச்சருக்கு பட்டு ஆடை அணிவித்துத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது வைகோ, அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோள்:
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய பெருமக்கள், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள். இவ்விரு தலைவர்களும், உலகத் தமிழர்களின் போற்றுதலுக்கு உரியவர்கள்.
சென்னை வான் ஊர்தி நிலையத்தின் பன்னாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்றும்; உள்நாட்டுப் போக்குவரத்து முனையம், காமராசர் உள்நாட்டு முனையம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரு தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்த பெயர்ப் பலகைகளை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, திடீரென நீக்கிவிட்டார்கள். அதனால், உலகம் முழுமையும் தமிழர்கள் கொந்தளித்தனர். எங்கள் இயக்கத்தின் சார்பில், வான் ஊர்தி நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பலத்த கண்டனம் தெரிவித்தன.
வான் ஊர்தி நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; அந்தப் பணி நிறைவு பெற்றதும், இரண்டு தலைவர்களின் பெயர்ப்பலகைகள் மீண்டும் பொருத்தப்படும் என, ஒன்றிய அரசின் வான்ஊர்தி போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்தது.
ஆனால், அடுத்த சில மாதங்களில், இணைய தளங்களில் இருந்தும், இரு தலைவர்களின் பெயர்களையும் ஓசை இன்றி நீக்கிவிட்டனர். நீக்க வேண்டும் என, யாரும் கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசிடம் கலந்து பேசவும் இல்லை. இது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயல்; பெரும் வேதனை அளிக்கின்றது.
எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி, அண்ணா, காமராசர் பெயர்களை மீண்டும் சூட்டிட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.”
இவ்வாறு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!