Tamilnadu

S.P.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு பின் FIR பதிவு? - தமிழ்நாடு அரசு தகவல்!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அதிமுக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Also Read: “இது ஸ்டாலின் மாடல்... திராவிட மாடலின் Updated Version” - மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி கட்டுரை!

இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது ஆட்சி மாறி உள்ளதாகல் சூழலும் மாறிவிட்டது. எனவே வழக்கு விசாரணை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டாலும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் மீண்டும் இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு விசாரணைக்கு பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் முழுமையாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கை ஆகஸ்ட் 2 வது வாரத்துக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Also Read: ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்களின் செல்போன்களை வேவு பார்த்த மோடி அரசு? : ஆய்வில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!