Tamilnadu

Pegasus : அரச பயங்கரவாதத்தின் கண்ணுக்கு தெரியாத கொலைகாரன்... கவுரி லங்கேஷ் முதல் தானிஷ் சித்திக்கி வரை!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் இருந்தவர் செசிலியோ பினரோ. சுயாதீன பத்திரிகையாளர். பொதுவாகவே மெக்சிகோவில் ஊழலும் குற்றமும் தலைவிரித்தாடும். அதற்கு முக்கியமான காரணம் அங்கிருக்கும் போதை மருந்து கடத்தல் தொழில்தான். கடத்தல் தொழில் மட்டுமின்றி அச்சுறுத்தல், கொலை முதலிய பல குற்றங்களும் இத்தகைய நிழலுலக கும்பல்களால் அங்கு அதிகம்.

செசிலியோ பினெரோ சுயாதீன பத்திரிகையாளர் என்றாலும் நிழலுலக கும்பல்களுடன் சேரவில்லை. தொடர்ந்து அக்கும்பல்களின் அட்டூழியங்களை எழுதி வந்தார். முக்கியமாக போதை கும்பல்களுக்கு ஆதரவாக அரசே எப்படி செயல்படுகிறது என்பதை தொடர்ந்து எழுதி வந்தார்.

கடத்தல் கூட்டங்களை எதிர்த்துக் கொண்டது மட்டுமின்றி அரசையும் எதிர்த்தார். மக்களிடம் தொடர்ந்து ஃபேஸ்புக் நேரலை வழியாக பேசினார். அரசை பகைத்துக் கொண்டார். விளைவாக உலகின் இன்னொரு பகுதியில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டது.

Pegasus !

இஸ்ரேலிய நிறுவனமான பெகாசஸ்ஸின் பிரதான வேலையே பெகாசஸ் என்கிற ஒரு spyware-ஐ வாடிக்கையாளர்கள் சுட்டும் நபர்களின் மொபைல் போன்களில் புக வைப்பார்கள். மொபைல் போன்களில் spyware சென்றதும் அவர்களின் அழைப்புகள் ஒட்டு கேட்கப்படும். வாட்சப் தகவல்கள் திருடப்படும். குறிப்பிட்ட நபரின் மொபைல் போனே அந்த நபருக்கு எதிராக உளவு பார்க்கும் கருவியாக மாற்றப்படும்.

பெகாசஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தனிநபர்கள் கிடையாது. அரசும் ஆட்சியாளர்களும்தான். தன் கட்சி தொடங்கி பொதுவெளி வரை தனக்கு பிரச்சினை தரக்கூடியவராக அவர்கள் சந்தேகப்படும் அனைவரின் பெயர்களையும் நிறுவனத்துக்கு அளிப்பார்கள். அந்த நபர்களின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு அத்தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தரும்.

இந்த வகையில்தான் திருமுருகன் காந்தி, உமர் காலீத் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் என பலரை மோடி அரசு ஒட்டு கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதிலும் முரண் பேசி, வஞ்சக நக்கல் பேசித் திரிவோர் மனிதம் அற்றவர்கள். மானுட விரோதிகள். மோடியின் கூட்டாளிகள்.

பெகாசஸ் நிறுவனத்தில் பெயர் வந்ததும் பினெரோவின் செல்பேசிக்குள் பறக்கும் குதிரை நுழைய அடுத்த சில தினங்களில் அவர் கொல்லப்படுகிறார். பெகாசஸ் நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளரென மெக்சிகோ அரசை குறிப்பிடுகிறார்கள். பினெரோ போலவே ஒரு சவுதி பத்திரிகையாளரும் பெகாசஸின் உதவியால் கொல்லப்பட்டிருக்கும் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் பட்டியல் 2018ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரையிலான பட்டியல் என கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் பெயர்கள் சிறைபடுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் செயல்முறையாக இருக்கும் நிலையில் கவுரி லங்கேஷ் தொடங்கி தற்போதைய தானிஷ் சித்திக்கி கொலை வரை நாம் யோசிப்பதற்கு புதியவொரு கோணத்தை தருகிறது.

Surveillance Technology என்பதும் தனி தகவல்கள் திருடுவதும் இன்றைய உலகின் அரசியலும் வணிகமுமாக இருக்கிறது. இவற்றுடன் கைகோர்த்திருக்கும் பா.ஜ.கவின் அரசியல், முதலாளித்துவம் கையளிக்கும் எதேச்சதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

தொழில்நுட்பம் சார்ந்த இத்தகைய எதேச்சதிகார அரச கட்டமைப்புக்கு எதிராக மக்களை தயார்படுத்துவது எப்படி என்பதுதான் நம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால்.

Also Read: ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்களின் செல்போன்களை வேவு பார்த்த மோடி அரசு? : ஆய்வில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!