Tamilnadu
வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்பதா? ஓ.பி.எஸ்-ஐ சரமாரியாக தாக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் விஷமத்தனமான அறிக்கைகளை வெளியிட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பதிலுரைத்துள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், கார்ப்பரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனம் போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களால் கடந்த ஆட்சிக் காலத்திலிருந்தே, குறிப்பாக 2018ஆம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால் காவிரிப்படுகை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளி வரை குழாய் பதிக்கும் திட்டத்தில் சுமார் 104 கிலோமீட்டர் நீளத்திற்கும், எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரையிலான குழாய் பதிக்கும் திட்டத்தில் 810 கிலோமீட்டர். நீளம், கெயில் நிறுவனத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாதானம்-மேமாத்தூர் குழாய் பதிக்கும் திட்டத்தில் 29 கிலோமீட்டர் நீளம், சிங்கசந்திரா-கிருஷ்ணகிரி குழாய் பதிக்கும் திட்டத்தில் 12 கிலோமீட்டர் நீளத்திற்கும் மற்றும் கொச்சியிலிருந்து பெங்களுரு வரையிலான குழாய் பதிக்கும் திட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 கிலோமீட்டர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கும் ஆக 13 கிலோமீட்டர் நீளத்திற்கும், கடந்த ஆட்சியிலேயே குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் விஜயவாடா-தர்மபுரி குழாய் பதிக்கும் திட்டத்திற்கு 61 கிலோமீட்டர் நீளத்திற்கும், கடந்த ஆட்சிக்காலத்திலேயே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன என்றும், ஜனவரி 2018ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 முடிய சுமார் 1000 கிலோமீட்டர் நீளத்திற்கு பெருவாரியாக விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய்கள் தமிழ்நாட்டில் பதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எண்ணூர்-மணலி குழாய் பதிக்கும் பணிகள் முடிவுபெற்று இத்திட்டம் கடந்த 6.3.2019 அன்று பாரத பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதேபோன்று, இராமநாதபுரம்-தூத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம் கடந்த 17.2.2021 அன்று பாரத பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
Also Read: Pegasus : ராகுல் காந்தியின் 2 செல்போன்களையும் உளவு பார்த்த மோடி அரசு? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
அந்நிகழ்வின்போது அப்போதைய துணை முதலமைச்சர் பங்கேற்றார் என்பதையும் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்துள்ளார். உண்மை நிலை இவ்வாறாக இருக்க, தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது குறித்து எதுவும் அறியாததுபோல், இத்தகைய திட்டங்கள் தற்போதுதான் புதிதாக செயல்படுத்தப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்கும் பொருட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் குழாய் பதிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டங்களைப் பொறுத்தவரையில், நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் கூடுதல் இழப்பீடு வழங்கியும் இத்திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கெங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது என்றும் இந்த அரசு விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தங்களின் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளை இனிமேலும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!