Tamilnadu
“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தலையாய கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்” என உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (17.07.2021) தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்,காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தடய அறிவியல் துறையில் பயிற்சியளித்தல்!
தடய அறிவியல் துறையின் செயல் பாடுகளான தடயங்களை கண்டறிய / சேகரிக்க குற்ற நிகழ்விடத்தில் தடய ஆய்வு செய்தல், குற்றச் சான்றுப் பொருட்களை (crime exhibits) ஆய்வு செய்தல், குற்றம் புரிந்தவரை கண்டறிவதில் காவல்துறைக்கு உதவி புரிதல், தடய அறிவியல் ஆய்வறிக்கை குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தல், (expert witness), காவல் துறை, நீதித்துறை மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு தடய அறிவியல் குறித்த பயிற்சி அளித்தல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் தீயணைப்புதுறைக்கு தேவையான பயிற்சிகளையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்து சேவையாற்றிட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும் தீ தடுப்பு நடவடிக்கைகளை பயிற்றுவித்து தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு!
சாலை பாதுகாப்பு, அதிக விபத்து ஏற்படும் கரும்புள்ளி (Blackspots) பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும் பணிகளை துரிதப்படுத்துதல், முக்கிய சாலைகளில் சாலைப் பாதுகாப்பை தணிக்கை செய்து அதன் அடிப்படையில் உரிய தொடர் நடவடிக்கை எடுத்தல், சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக நடைபாதைகளை ஏற்படுத்துதல், வட்டார போக்குவரத்து அலுவலகம் / ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் மாதிரி வாகன பயிற்சி வடிவம் (Simulators) வழங்குதல் மற்றும் அதற்கான பயிற்சியை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சாலை பாதுகாப்பை வலுப்படுத்திட தகவல் மேலாண்மை மையம் ஏற்படுத்திட வேண்டும் என்றும், விபத்துகள் நடந்த இடங்களை அறிவியல்பூர்வமாக பகுப்பாய்வு செய்திடவும், அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ளகடைகள் / உணவகங்களில் உள்ள நபர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் சொந்தக் கட்டிடம் கட்டவும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். சிறைகளின் பாதுகாப்பு, மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், கிளைச் சிறைகள், பாஸ்டல் பள்ளிகள், திறந்த வெளிச் சிறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தோட்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், இப்பணியினை நன்கு விரிவுப்படுத்த கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள்!
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மது அருந்துதல் மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணாக்கர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் போன்றவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்றும், போலி மதுபானம் தயாரிப்பு, எரிசாராயம் கடத்தி விற்பனை செய்வது, பிற மாநில மதுபான வகைகளை கடத்தி விற்பனை செய்வது, ஆகியவற்றை தடுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும், மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதி அளிப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!