Tamilnadu

4 பேருடன் திருமணம்... 60 லட்சம் மோசடி... கிராமத்தையே ஏமாற்றிய ’பலே’ பெண் - போலிஸில் சிக்கியது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டம் சிறுவயல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது உறவினர் சுரேஷ். போலிஸான இவருக்கும் செளமியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, சௌமியா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உறவினர் விஜய் என்பவரிடம் 13 பவுன் நகை மற்றும் பணம் பெற்றுள்ளார். மேலும் அப்போது விஜய்யிடம், எனக்கு அ.தி.மு.க அமைச்சர் ஒருவரைத் தெரியும், அவர் மூலம் உங்கள் தம்பிக்கு நியாயவிலைக் கடையில் அரசு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறி ரூபாய் 75 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.

அதேபோல், தம்பி விஸ்வா, பெரியம்மா மகன் பாலமுருகன் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் தலா 2.75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். மேலும், சிறுவயல் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 60 பவுன் நகை மற்றும் 30 லட்சம் பணம் என மொத்தம் 60 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சௌமியா மீது சிறுவயல் பகுதியைச் சேர்ந்த பலர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் செய்துள்ளனர். இதையடுத்து போலிஸார் சௌமியா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் புகார் செய்யப்பட்டதை அறிந்த சௌமியா அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார். பிறகு போலிஸார் அவரின் உறவினர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கரூர் பகுதியைச் சார்ந்த சௌமியா ஏற்கனவே அரியலூரைச் சேர்ந்த சக்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து 2019ம் ஆண்டு போலிஸார் சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து, சௌமியா ஜூன் மாதம் 21ஆம் தேதி சீனிவாசன் என்ற லேப் டெக்னீசியனை சேலத்தில் திருமணம் செய்து அங்கேயே இருந்துள்ளார். இது பற்றி அறிந்த ராமநாதபுரம் போலிஸார் சேலம் சென்று சௌமியாவை கைது செய்தனர். பின்னர் சௌமியாவை ராமநாதபுரம் அழைத்து வந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சௌமியா 4 பேரை மோசடியாக திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சௌமியாவின் அனைத்து குற்றங்களுக்கும் சுரேஷின் உறவினர் சதீஷ் இதற்கு உடந்தையாக இருந்ததும் போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சௌமியா மற்றும் சதீஷை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: குடும்பத்திற்குள்ளேயே அடுத்தடுத்து கொலை... மூட நம்பிக்கை காரணமா? - ஜார்க்கண்டை உலுக்கிய கொடூர சம்பவம்!