Tamilnadu
“நீட் தேர்வா? மாணவர்களின் உயிரா?” - ஒன்றிய அரசுக்கு ‘தினத்தந்தி’ தலையங்கம் கேள்வி!
கொரோனா 3-வது அலை நிச்சயமாக வராது என்ற உறுதியான நிலையை ஏற்படுத்திய பிறகுதான், ‘நீட்’ தேர்வு குறித்து முடிவுசெய்ய வேண்டுமே தவிர, ‘நீட்’ தேர்வை அதற்கு முன்பு நடத்துவதில் ஒரு அச்சமான சூழ்நிலையை மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும், ஏன் சமுதாயத்துக்கிடையேயும் ஏற்படுத்திவிடக்கூடாது என தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
தினத்தந்தி நாளேட்டின் (ஜூலை 17, 2021) இன்றைய தலையங்கம் வருமாறு:
“மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ‘நீட்’ தேர்வு வேண்டாம். 2017-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோல, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்” என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு. இந்த ஆண்டு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது விலக்கு பெறவேண்டும் என்ற முனைப்பில், அனைத்து முயற்சிகளையும் மிகத் தீவிரமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது. ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சியும் மற்றொரு பக்கத்தில் நடந்துவருகிறது.
இந்த கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக ‘நீட்’ தேர்வு ஆகஸ்டு 1-ந்தேதி நடக்கும் என்று ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 155 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடந்த நிலையில், தற்போது 198 நகரங்களில் நடக்கும். அதேபோல், 3 ஆயிரத்து 862 மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு, இந்த ஆண்டு கூடுதல் மையங்களில் நடத்தப்படும்’ என்று கூறியிருந்தார்.
மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாம், வங்கம், உருது, குஜராத்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, மலையாளம் ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடக்கும். வழக்கம்போல காகிதம், பேனா கொண்டு தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டநிலையில், ஏராளமான மாணவர்கள் விண்ணப்பப்பதிவை தொடங்கிவிட்டார்கள்.
இப்போது கொரோனா 3-வது அலை வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் நாடு கவலையோடு இருக்கிறது. நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால், ‘உலகம் முழுவதும் 3-வது அலை பலநாடுகளில் வந்துவிட்டநிலையில், இந்தியா மிகவும் பொறுப்போடு கொரோனா எண்ணிக்கை உயர்ந்துவிடாமல், எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். தற்போது எல்லோரும் தங்கள் கைகளை ஒன்றாக இணைத்து 3-வது அலை வராமல் தடுக்கவேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கூட 3-வது அலை எப்போது வரும்? என்று பேசிக்கொண்டிருப்பதைவிட, அது வராமலிருக்கும் நிலையை உருவாக்குவதே எல்லோருடைய கடமை என்று பேசியுள்ளார். இந்த 3-வது அலை பெரும்பாலும் இளைய சமுதாயத்தினரைத்தான் தாக்கும் அபாயம் இருக்கிறது என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதன் மூலமாகத்தான் 3-வது அலையை வராமல் தடுக்கமுடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மாநிலங்களுக்கு தடுப்பூசி சப்ளை செய்யும் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் கட்டமைப்புள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு, “தமிழக மக்கள் தொகைக்கேற்ப தடுப்பூசி டோஸ் சப்ளை செய்யாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறப்பு ஒதுக்கீடாக ஒருகோடி தடுப்பூசி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், நாட்டில் முதல் கடமை 3-வது அலையை தடுத்துநிறுத்த வேண்டுமேதவிர, ‘நீட்’ தேர்வு நடத்தி 3-வது அலைக்கான வாசலை திறந்துவிடக்கூடாது. நேற்று பிரதமரோடு காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தற்போதைய சூழலில் ‘நீட்’ போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆக, 3-வது அலை நிச்சயமாக வராது என்ற உறுதியான நிலையை ஏற்படுத்திய பிறகுதான், ‘நீட்’ தேர்வு குறித்து முடிவுசெய்ய வேண்டுமே தவிர, ‘நீட்’ தேர்வை அதற்கு முன்பு நடத்துவதில் ஒரு அச்சமான சூழ்நிலையை மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும், ஏன் சமுதாயத்துக்கிடையேயும் ஏற்படுத்திவிடக்கூடாது. ‘நீட்’ தேர்வா? மாணவர்களின் உயிரா? என்றால், மாணவர்களின் உயிர்தான் முக்கியம். ‘நீட்’ தேர்வை எப்போதும் நடத்திக்கொள்ளலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!