Tamilnadu

பழனியில் கேரள பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த ஜூன் 19ம் தேதி கேரள பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரள போலிஸார் பழனிக்கு வந்து விசாரணை நடத்திச் சென்றனர். மேலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் இணையவழியில் தமிழ்நாடு டி.ஜி.பிக்கும் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பழனி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று பழனி போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும், புகார் அளித்தவரும் நடமாடியதற்கான ஆதாரங்கள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் பழனியில் வேறு இடங்களில் சுற்றி வந்ததுடன் மதுபானம் வாங்கியதற்கான சி.சி.டி.வி ஆதாரங்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து கேரள பெண்ணும், போலிஸிடம் புகார் அளித்த தர்மராஜும் தாய் - மகன் என்று கூறி அறை வாடகை எடுத்ததாக விடுதி உரிமையாளர் முத்து போலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்ணும், அவருடன் வந்தவரும் சில நாட்களுக்கு முன்பு தங்கும் விடுதி உரிமையாளரை தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்று குடிபோதையில் தகராறு செய்ததால் இருவரையும் வெளியேற்றியதாக விடுதி உரிமையாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடன் வந்த நபரும் கணவன் - மனைவி இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை பரிசோதனை செய்த கேரளா மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பழனியில் கேரள பெண் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இது பொய்யான குற்றச்சாட்டு என்பதை போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணையை நடத்துவதற்காக திண்டுக்கல் போலிஸார் கேரளா சென்றுள்ளனர். இதையடுத்து தர்மராஜ் மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் நடத்தும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகக்கூடும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: பெண்கள் பற்றி அவதூறு பரப்பும் இந்துத்துவ, பாஜகவினர் - சென்னை போலிஸ் கமிஷ்னரிடம் பன்னாட்டு அமைப்பு புகார்!