Tamilnadu
"சென்னை ஐகோர்ட் தீர்ப்பு, தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றி" : கி.வீரமணி நன்றி!
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, ‘நீட்' தேர்வு தாக்கம் பற்றிய அறிக்கையைத் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றி; இவ்வழக்கில் இணைத்துக்கொண்ட அத்தனை கட்சி, அமைப்புகளுக்கும் உளமார்ந்த பாராட்டு கலந்த நன்றி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு.க அரசு - ‘நீட்' தேர்வினால் ஏற்படும் தாக்கம் எப்படிப்பட்டது - எவ்வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை சட்டப்பூர்வமாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை கூற - நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஏ.கே.ராஜன் குழுவின் நியமனம் செல்லாது; அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது; எனவே, அதை ரத்து செய்து ஆணையிடவேண்டும் என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று (13.7.2021) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பா.ஜ.க.வின் வழக்கைத் தள்ளுபடி செய்து, ஏ.கே.ராஜன் குழு, ‘நீட்' தேர்வு தாக்கம் பற்றிய அறிக்கையைத் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளதானது தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். இதனைப்பாராட்டி வரவேற்கிறோம்!
இந்த வழக்கு அழிவழக்கு என்பதை நாடே புரிந்துகொள்ளும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் பா.ஜ.க. மனுதாரரைப் பார்த்து, ''இப்படி கோர நீங்கள் யார்?'' என்ற கேள்வியையும், இது கொள்கை முடிவு; இதில் தலையிட முடியாது. இப்படி ஒரு குழுவை நியமித்து ஆலோசிக்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அதைத் தடை செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தி, கேள்வி கேட்டிருப்பதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் குமுறலை எடுத்துக்காட்டி, ‘நீட்' தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி, தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும் உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது!
அந்தக் குழுவின் அறிக்கை என்ன என்று கூடத் தெரிந்துகொள்ளும் முன்பே, அப்படி ஒரு குழு போடும் மாநில அரசின் உரிமையைக் கேள்வி கேட்டது - கேட்பது- எப்படிப்பட்ட அரசமைப்புச் சட்ட உரிமைப் பறிப்பு என்பதையும், அதனை உயர்நீதிமன்றம் ஏற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியதும் முக்கியமானதாகும்.
இதில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உடனடியாகப் பொங்கி எழுந்து சுமார் 27 பேர் இவ்வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வந்தனர். பா.ஜ.க தனித்து நின்றது. பா.ஜ.க.வின் இந்த முயற்சி எப்படிப்பட்ட பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பதற்கு அதே ராகத்தை வாசித்த ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தின் கருத்தும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைந்துள்ளது என்பதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு ஆவலோடு எதிர்நோக்கும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எப்படிப்பட்ட ஆக்க ரீதியானதாக இருக்கும் என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவிப்பார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
இது தொடக்கம்தான் - நாம் தாண்டவேண்டிய தடைகளும், கடக்கவேண்டிய தூரமும் அதிகம்! அடுத்த வியூகம் பல்முனை வியூகமாக அமைவதே பிரச்சினைக்குத் தீர்வு காண உதவக்கூடும் என்பது நமது பழைய அனுபவமாகும். முன்வந்த அத்தனைக் கட்சி, அமைப்புகளுக்கும் நமது உளமார்ந்த பாராட்டு கலந்த நன்றி!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!