Tamilnadu
“நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்தது செல்லும்” - கரு.நாகராஜன் மனு தள்ளுபடி!
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் எனத் தெரிவித்து, இதை எதிர்த்து பா.ஜ.க தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழுவை நியமித்ததன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனுவில் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சியை சேர்ந்த அவர் இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை என்றும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84343 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும், நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை என்றும், அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர் விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு என்ற போர்வையில் நல்லாட்சி வழங்கும் அதிகாரத்திலும், அரசியல்சாசன அடிப்படை பணிகளிலும் தலையிடும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்றும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் எனவும், கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் முறை 1984ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்ததாகவும், 2006ஆம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற இயலாத நிலை உள்ளதாக அரசுக்கு மனுக்கள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்கள், பயிற்றுவிக்கும் முறை, தேர்வு நடைமுறை, மதிப்பீடு அனைத்தும் தமிழ்நாடு கல்வி வாரியத்திற்கும், பிற கல்வி வாரியங்களுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய பின்னரே நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஒரு ஆய்வு என்பது அவசியமாவதால், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்தக்குழு அமைகப்பட்டுள்ளதாகவும், இதை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என கூற முடியாது எனவும் பதில் மனுவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுக்குழு, அரசுக்கு இன்னும் அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் கரு.நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல எனவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஏ.கே.ராஜன் குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பானைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி, விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில், அரசியல் சாசனம் 162 வது பிரிவு சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம் ஆனால் ஒன்றிய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, ஒன்றிய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, ஒன்றிய அரசு சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை என தெரிவித்தார்.
குழு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதை பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் ஒன்றிய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம் எனவும், அதேபோல நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம், குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்து, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை எனக் கூறி கரு.நாகராஜனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!