Tamilnadu

வாட்ஸ் அப் குழு வைத்து SBI-ல் கொள்ளையடிக்க முயற்சி; ஐவரை கைது செய்ததில் வெளியான திடுக்கிடும் தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது.

கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 5 பேரை போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அவர்களை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் கோவில்பட்டியில் பாரத் ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்க பல மாதங்களாக திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் இந்த 5 பேர் வாட்ஸ்அப் மூலமாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். கொள்ளை அடிப்பதற்கான பயிற்சி திட்டத்தை யூடியூபில் படங்களை பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர்.

மேலும் இவர்கள் தங்களுடைய வாட்ஸ்அப் மூலமாக தங்களுடைய கொள்ளை செயல் திட்டத்தை அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளனர்.

இந்த கொள்ளை முயற்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த ஸ்டேட் பேங்க் முன்னாள் உதவி மேலாளர் வாஷிங்டன் மற்றும் கீழக்கரையை சேர்ந்த ஆண்டனி, கமுதி சேர்ந்த குமார், கோவில்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி, சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்த வெள்ளை பாண்டியன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பட்டியில் பல மாதங்களாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டி சினிமா பாணியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மனைவியின் சடலம்.. மாயமான கணவன்: கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!