Tamilnadu
“ ‘கொங்கு நாடு’ என்ற ஒன்றிய அரசின் திட்டம் புலிவால் பிடித்த கதையாக முடியும்” : முத்தரசன் கடும் கண்டனம்!
அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு “கொங்கு நாடு” என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும் என்பதை எச்சரிக்கிறோம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தும், 35 ஏ பிரிவில் வழங்கப்படிருந்த உரிமைகளையும் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பறித்ததை நாடு மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட ஜம்மு - காஷ்மீர் மூன்றாக உடைக்கப்பட்டதால் அங்கு அமைதியற்ற நிலை தொடர்கிறது.
இதே வழிமுறையில் தமிழ்நாட்டை பிளவு படுத்த பா.ஜ.க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தச் செய்தி உண்மையானால் அது ஆபத்தான பாரதூர விளைவுகள் கொண்டதாகும். இந்த பிளவுவாத சிந்தனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுகுறித்து பா.ஜ.க ஒன்றிய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுக்க, பா.ஜ.கவும், அதன் பரிவாரங்களும் தி.மு.க மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான அரசியல் தாக்குதல் நடத்தி வந்தன.
ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் பகை வளர்க்கும் அரசியலை உணர்ந்த மக்கள் பா.ஜ.க அங்கம் வகித்த கூட்டணியை நிராகரித்தனர். தற்போது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மேற்கு மாவட்டங்களை குறி வைத்து பிளவுவாத அரசியல் கருத்துக்களை பரப்புகிறதோ என்ற ஆழமான சந்தேகம் எழுகிறது.
இப்பகுதியில் அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு “கொங்கு நாடு” என்ற விஷ விதை தூவும் ஒன்றிய அரசின் திட்டம் புலி வால் பிடித்த கதையாக முடியும் என்பதை எச்சரிக்கிறோம்.
முக்கிய உற்பத்தித் தொழில்களும், செழிப்பான விவசாயமும் உள்ள இப்பகுதியில் அமைதி சீர்குலைந்தால் எண்ணிப்பார்ககவும் முடியாத இழப்புகள் ஏற்பட்டுவிடும். இதனை மேற்கு மாவட்ட மக்களும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு பெருமக்களும் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க ஒன்றிய அரசு திட்மிட்டுள்ள விஷம விளையாட்டை, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கட்சி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஒரணியாக திரண்டு முறியடிக்க முன் வர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!