Tamilnadu
“எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைவிடுவது அரைவேக்காட்டுத்தனம்”: அமைச்சர் அர.சக்கரபாணி பதிலடி!
நெல் கொள்முதல் நிலையங்களில் எங்கு தவறு நடைபெற்றுள்ளது என்பதை குறிப்பிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு அமைச்சர் அர.சக்கரபாணி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிக்கை வருமாறு:-
நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொத்தாம் பொதுவாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்குவதாகவும், அதற்காக அதிகாரிகளை மிரட்டுவதாகவும் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்றநிலை இருப்பதாகவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உப்பிலியாபுரம் பகுதிகளில் தங்கநகர், பி.மேட்டூர், வைரி செட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைத்து, அங்குவிவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில் ஆளும்கட்சியினரின் அரசியல் தலையீடு காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள்தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும்!
இந்த அறிக்கையைப் பார்த்தாலே கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று அவர் கூறியது போலுள்ளது என்பது அனைவருக்கும், குறிப்பாக உப்பிலியாபுரம் பகுதி விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும். ‘கமிஷன்’ என்ற தனக்குப் பிடித்தமான சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் முன்னாள் முதலமைச்சரும் ‘விவசாயி’யுமான அவரின் ஆட்சியில் உப்பிலியாபுரம் பகுதியில் 30.06.2020 அன்று செயல்பட்ட கொள்முதல் நிலையங்கள் 5. ஆனால் இப்போது செயல்படும் கொள்முதல் நிலையங்கள் 12.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அவரது ஆட்சிக்காலத்தில் 01.05.2020 முதல்30.06.2020 வரை சென்ற ஆண்டு கொள்முதல் செய்த அளவு 2446 மெட்ரிக்டன்கள். ஆனால் இந்த ஆண்டு 01.05.2021 முதல் 30.06.2021 வரை 8065 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் 01.05.2020 முதல் 30.06.2020 வரை 2,39,534 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 01.05.2021 முதல் 30.06.2021 வரை 2,97,210 மெட்ரிக்டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அதிகளவில் கொள்முதல்!
முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி அமைந்தபின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூன்று மடங்குக்கு மேலான அளவிலும், டெல்டா மாவட்டங்களில் 24.ரூக்கு மேலும் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவரத்தை அவர் அறியாமல் தான் பேசுகிறாரா? நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யலாம் என்று அவருடைய ஆட்சியிலேயே சுற்றறிக்கை அனுப்பிவிட்டு இப்போது ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள் என்று அறிக்கைவிடுவது அரைவேக்காட்டுத் தனம்.
அவரின் ஆட்சிக் காலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் எருக்கூர் என்ற ஊரில் நெல்லைச் சேமித்து வைக்க 50000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் அவரால் 02.07.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டு இன்றளவும் முழுமையாகச் செயல்படாமல் உள்ளதையும் அதைச் செயல்படுத்த இன்னும் 14 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதையும் அவர் அறிவாரா?. அதுமட்டுமல்ல ஆண்டொன்றுக்கு 27500 டன் அரைக்கும் திறன்கொண்ட அரிசி அரவை ஆலைகளுக்கு 50000 டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் கட்டியதை என்னவென்று சொல்வது?
தவறு நடந்துள்ளது என்றால் நடவடிக்கை!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் புகார் சொல்லாமல் தீர விசாரித்து எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டுச் சொன்னால் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதை அவருக்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!