Tamilnadu
மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு: எவற்றிற்கு அனுமதி? எவற்றிற்கு தடை?- முழு விபரம்!
தமிழ்நாட்டில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு :
“தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, அனைத்துப் பகுதிகளிலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கெனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.
புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களைத் தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
உணவகங்கள், தேநீர்க் கடைகள், அடுமனைகள் (Bakery), நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனைக் கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டுப் போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.
எவற்றிற்குத் தடை?
· மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
· ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து
· திரையரங்குகள்
· அனைத்து மதுக்கூடங்கள்
· நீச்சல் குளங்கள்
· பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
· பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
· பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
· உயிரியல் பூங்காக்கள்
· நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
· இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?