Tamilnadu

"செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்திமையத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கவேண்டும்”: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இதற்கு ஒன்றிய அரசே காரணம். தட்டுப்பாட்டைப் போக்கிட, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும் அல்லது மாநில அரசின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இதற்கு ஒன்றிய அரசே காரணம்.

* செங்கல்பட்டு அருகே உள்ள, HLL பயோடெக் நிறுவனம் மூலம், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக மேற்கொள்ள ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஒன்றிய அரசால் உற்பத்தியை மேற்கொள்ள முடியாவிட்டால், அந்நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்நிறுவனத்தின் மூலம் உற்பத்தியை இதுவரை தொடங்கிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல், தனியாருக்காகக் காத்திருப்பது கண்டனத்திற்குரியது. நாட்டில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கணக்கில் கொள்ளாமல், ஒன்றிய அரசு செயல்படுவது மக்கள் நலனுக்கு எதிரானது. தற்பொழுது நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

* தமிழ்நாட்டிற்குத் தேவையான அளவு கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்காமல் இழுத்தடிப்பது சரியல்ல. உடனடியாகத் தமிழ்நாட்டிற்குரிய தடுப்பூசியைக் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.

* கொரோனா இரண்டாம் அலையின் பொழுது, 798க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 20 மருத்துவர்கள் வீதம் இறந்துள்ளனர்.

* தடுப்பூசி போட்டபின்பும், தொற்று ஏற்பட்டால் அது, தடுப்பாற்றலைத் தகர்த்து உருவாகும் தொற்று (break through infection) என்று அழைக்கப்படுகிறது.

* இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அரசு அவர்களை எளிதில் பதிவு செய்ய முடியும். அவர்களிடம் மரபணுச் சரடு வரிசைப்படுத்தல் (Genome Sequencing) போன்ற முக்கிய ஆய்வுகளை எளிதாகச் செய்திருக்க முடியும். ஆனால், ஒன்றிய அரசு அதைச் செய்யவில்லை.

தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளில் 5 விழுக்காடு மாதிரிகளையாவது, மரபணுச் சரடு வரிசைப்படுத்தல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், இந்தியாவில் 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இந்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது மருத்துவ ஆராய்ச்சியின் மீதான அக்கறை இன்மையைக் காட்டுகிறது. இத்தகைய போக்கு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.

* குறைந்தபட்சம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு, மருத்துவப் பணியாளர்களுக்குக்கூட, மரபணுச் சரடு வரிசை முறை பரிசோதனைகளைச் செய்யவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

மரபணுச் சரடு வரிசைப்படுத்தல் ஆய்வை முறையாக அதிக அளவில் இங்கிலாந்து, அமெரிக்கா போல் செய்திருந்தால், உருமாறிய டெல்டா கரோனா வைரஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்திருக்க முடியும். இரண்டாவது அலையில் ஏற்பட்ட மிகப் பெரும் பாதிப்புகளை உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். இவற்றை ஒன்றிய அரசு செய்யாதது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

* மரபணுச் சரடு வரிசை முறை பரிசோதனை உட்பட அனைத்து ஆய்வுகளையும் தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம், மரபணு மாற்றம், அறிகுறி மாற்றம் போன்றவற்றை அறிய முடியும். ஆரம்பக் கட்டத்திலேயே புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதை உறுதி செய்து, சிகிச்சையை முறையாகச் செய்ய முடியும். தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாகச் செய்ய முடியும்.

* இந்த மரபணுச் சரடு வரிசை முறை ஆய்வின் மூலம், தேவைப்பட்டால், தடுப்பூசிகளில் மாற்றங்களைக் கொண்டுவரவும் முடியும்.

* இறந்த மருத்துவத் துறையினருக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

* கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு, மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் பொழுதும், அல்லது இறக்க நேரிட்டால் இறப்புச் சான்றிதழிலும் கோவிட்-19 எனக் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் மட்டுமே காப்பீட்டுத் திட்டப் பலன்களையும், ஒன்றிய, மாநில அரசுகளின் இழப்பீடுகளையும் பெற முடியும்.

# மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசியை, மூன்றாவது தவணையாக, பூஸ்டர் டோஸாக அறிவியல் பூர்வமாகப் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 2019 முதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆயினும், அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத போதிலும்கூட, கடந்த 16 மாதங்களாக கொரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற அவர்கள் தொடர்ந்து கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

* மழை, வெள்ளம், புயல் பாதிப்பின் பொழுதும் சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர். கருப்புப் பூஞ்சை சிகிச்சை, டெங்கு தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் எனத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, அவர்களது கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

* பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபொழுது, மூன்றாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களின் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அம்மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப் பட்டனர். தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

முதுநிலை மருத்துவம் பயின்ற அரசு மருத்துவர்களுக்கு, இந்தத் தேர்வுகள் நடைபெறும் நாட்களை, படிப்புக் கால விடுப்பு நாட்களாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்குத் தேர்விற்கான விடுப்புகளை வழங்கிட வேண்டும்.

* கொரோனா, டெங்கு, ஜிகா போன்ற நோய்களுக்குக் காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி போன்ற ஒரேமாதிரியான அறிகுறிகள் ஏற்படுவதால், எந்த அறிகுறி வந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்கிட வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இந்நோய்களுக்கான பரிசோதனை வசதிகளைப் பரவலாக்கிட வேண்டும்.

* டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஜிகா வைரஸ் பக்கத்து மாநிலத்திலேயே உள்ளதால் இங்கும் பரவுமோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

* இந்த வைரஸ்களைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களை ஒழிக்கும் பணியில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். கொசு ஒழிப்புப் பணிக்குப் போதிய பணியாளர்களை நியமித்திட வேண்டும்.

* 2020 மார்ச் மாதம் முதல் கரோனா பிரச்சனை தொடங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இப்பிரச்சினை நீடித்து வருகிறது. 2022 வரை இப்பிரச்சினை நீடிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் இரண்டு, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

* கல்வி நிறுவனங்கள் செயல்படாததால், இடைநிற்றல் அதிகரித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பு, குழந்தைகள் மீதான வீட்டு வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள், குழந்தைத் திருமணங்கள் போன்றவை அதிகரித்துள்ளன. புகை, மது, போதைப் பழக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மாணாக்கர்கள் அதிக அளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி மற்றும் உடல், உள நலன்களைக் கருத்தில் கொண்டு, உரிய முடிவுகளை அறிவியல் பூர்வமாக எடுத்திட வேண்டும்.

* ஸ்மார்ட் செல்போன் மற்றும் தடையில்லா இணைய வசதி இல்லாததால், இணைய வழியில் பல்லாயிரக்கணக்கான மாணாக்கர்கள் கல்வியைக் கற்க முடியவில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி தொடர்பான இணையதளங்களை மட்டும் பார்க்கும் வசதிகளுடன் மடிக்கணினி / சிறு கணினி / கைபேசி போன்றவற்றை வகுப்பிற்கு ஏற்ப இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொற்று முடிந்தபின்பும் கூட, கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணாக்கர்கள், சிறப்புப் பயிற்சிகளைப் பெற அவை பயனளிக்கும்.

* சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறும் சாதியப் பாகுபாடு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஐ.ஐ.டி உட்பட, ஐஐடிக்களில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. இதுகுறித்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.