Tamilnadu

“அதிமுக ஆட்சியில் நடந்த ஆள்மாறாட்டம், போலி பத்திரங்கள் மீது விரைவில் நடவடிக்கை”: அமைச்சர் மூர்த்தி உறுதி!

மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகிணி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி,”தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியில் இன்று மதுரையில் கட்டுமான தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும் அரசு சார்பில் மட்டுமல்லாமல் தனியார்த் துறையிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகக் கட்டுமான தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு பதிவுத்துறையில் கைடுலைன் வேல்யூ குறைவாகப் பதிவு செய்தால் வருவாய்த்துறை வட்டாட்சியர் நேரடியாக களப்பணியில் சென்று ஆய்வு செய்து, கட்டணம் குறைப்பு இருந்தால் வசூலித்து அரசுக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டியது அவருடைய கடமை. ஆனால், கடந்த காலங்களில் இது போன்று அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை.

மேலும், தேனி மாவட்டத்தில் முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார் என்பவர் அரசுத் துறையில் செலுத்தவேண்டிய பணத்தை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு 20 லட்சத்து 23 ஆயிரம் 650 ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்ததை அடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

இதுபோன்று அதிரடியாகப் பதிவுத் துறையில் கடந்த காலத்தில் நடந்த ஆள்மாறாட்டம் போலிப் பத்திரங்கள் போன்றவை எல்லாம் கண்டறிந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பதிவுத் துறை செயல்பட்டு வருகிறது.

தேர்தல் அறிக்கையில் சொல்லாததைக் கூட இரண்டு மாத காலத்திற்குள்ளாகப் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு இலவசமாக பல்வேறு பொருட்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் அறிவித்த மோனோ ரயிலும் எங்கே ஓடுகிறது? அதேபோல், 100 கோடியில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்றார்கள், அது எங்கே என்று தெரியவில்லை.

ஆனால், தி.மு.க ஆட்சி அப்படியல்ல தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் படிப்படியாக நிறைவேற்றுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!