Tamilnadu
“நெற்களஞ்சியமான டெல்டா விவசாயிகளின் நலனில் தனி அக்கறை எனக்கு உண்டு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
காவிரி தீரத்தைச் சேர்ந்த தலைவர் கலைஞரின் மகன் என்ற முறையிலும், மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயிகளின் நலனில் தனி அக்கறை எனக்கு உண்டு என தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், உயிர்நிகர்த் தொண்டர்களுக்கு மடல் வரைந்துள்ளார்.
“நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் நமக்குக் கற்றுத்தந்த வழியில், அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடனும் வாழ்த்துகளுடனும் நல்லாட்சி பீடுநடை போட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் மனமுவந்து வழங்கிய மகத்தான வெற்றியையும் அந்த மக்களுக்கான நல்லாட்சியையும் நம் உயிர்நிகர் தலைவர் பிறந்த திருக்குவளையிலும், அவர் தமிழ்க்கொடி ஏந்தி திராவிடக் கொள்கை முழங்கிய திருவாரூரிலும் நேரில் சென்று காணிக்கையாக்கி மகிழ்ந்திட, அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் ஒருமித்த நல்லாதரவுடன், உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம் மனநிறைவை அளித்திருக்கிறது.
தந்தை பெரியாரின் ஈரோடும், பேரறிஞர் அண்ணாவின் காஞ்சியும், முத்தமிழறிஞர் கலைஞரின் திருக்குவளை - திருவாரூரும் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும் - இனித்திருக்கும் திராவிடத் திருத்தலங்கள். அவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச் சுடரை ஏந்தி மேற்கொண்ட பயணத்தில் பேரிடர் நேரப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஏற்கனவே தந்தை பெரியாரின் ஈரோட்டிற்குப் பயணித்தேன். பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிபுரம் இல்லத்திற்குச் சென்று, ‘மக்களிடம் செல்’ என்று அவர் வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி பீடுநடை போடும் என அங்கிருந்த வருகையாளர் குறிப்பேட்டில் பதிவிட்டேன்.
ஈரோடு என்பது முத்தமிழறிஞர் கலைஞரின் தன்மான குருகுலம். காஞ்சிபுரம் என்பது முத்தமிழறிஞரின் கன்னித் தமிழ்ப் பாசறை. அந்த முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளையும், வளர்ந்த திருவாரூரும் அவரது உயிர்க் காற்று கலந்த ஊர்கள்; நமக்கு இலட்சிய உணர்வூட்டும் தலங்கள். உங்களில் ஒருவனாக - உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் சார்பிலும்தான் கழகத்தின் வெற்றிக்குப் பிறகான என் முதல் பயணத்தை மேற்கொண்டேன்.
ஜூலை 6-ஆம் நாள் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து திருவாரூரை நோக்கிப் பயணித்த போது, விமான நிலையத்திலிருந்தே கழகத்தினரும் பொதுமக்களும் பெரும் வரவேற்பளித்தனர். கழக முதன்மைச் செயலாளரான மூத்த அமைச்சர் கே.என். நேரு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளரான அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், கழக நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.
கழக நிர்வாகிகள் பலரும், நான் கேட்டுக்கொண்டபடி பொன்னாடைகள், சால்வைகள், பூமாலைகள், பூங்கொத்துகள் இவற்றைத் தவிர்த்து, புத்தகங்களைப் பரிசளித்தனர். பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நம்பிக்கையுடன் வழங்கினர்.
வழிநெடுக வாஞ்சைமிகு வரவேற்புகளை ஏற்றுக்கொண்டு, திருச்சி மாவட்ட எல்லையைக் கடந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட எல்லைக்கு வந்தபோது அங்கும் கழகத்தினரும் பொதுமக்களும் திரண்டிருந்து அன்பைப் பொழிந்தனர். கழகத்தின் இருவண்ணக் கொடிகள் காற்றில் அசைந்து வரவேற்பை வழங்கின. தஞ்சை மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் வழியெங்கும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மக்கள் திரண்டிருந்தனர்.
மன்னார்குடியில் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாநில வளர்ச்சி ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோருடன் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக வந்து வரவேற்பு வழங்கினர். இத்தனைச் சிறப்பாகவும் எழுச்சியாகவும் ஆளுங்கட்சிக்குப் பொதுமக்கள் வரவேற்பளித்தது கண்டு மனம் மகிழ்ந்தேன் - நெஞ்சம் நெகிழ்ந்தேன்! மக்களுக்கும் அரசுக்குமான உறவை வெளிப்படுத்தும் விதத்தில் மன்னார்குடி பகுதியெங்கும் அன்பான வரவேற்பில் திளைத்துத் திகைத்தேன்.
பயண வழியில் செருமங்கலம் என்ற இடத்தில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கிருந்த விவசாயிகளும், நெல் சுமக்கும் தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகளை சுமந்து, எடைபோட்டு, அவற்றை மூட்டையாகத் தைத்து, அடுக்கிவைக்கும் பணியில் நாள்தோறும் ஈடுபட்டிருப்பவர்கள் தொழிலாளத் தோழர்கள். நாள்தோறும் டன் கணக்கில் நெல்லை மூட்டை மூட்டையாக முதுகில் சுமக்கின்றனர்.
அவர்களுக்கான ஊதியம் மிகக் குறைவாக உள்ளது என்பதை இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவும் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நெல் சுமக்கும் தொழிலாளர்களின் நிலையைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போதே அவர்களின் நலன் கருதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த அரசு தெரிவித்தது. நேரிலும், அந்தத் தொழிலாளர்களிடம் கேட்டறிந்தேன். அவர்களின் கோரிக்கைகள் மீது அக்கறை செலுத்தி, ஆவன செய்திட கழக அரசு தயாராக இருக்கிறது.
செருமங்கலம் கொள்முதல் நிலையத்தில் இயற்கை விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை என்னிடம் காட்டினர். இயற்கை விவசாயத்தைப் போற்றியவரான மறைந்த “நெல்” ஜெயராமன் அவர்களின் பெயரிலான பாரம்பரிய நெல்பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் அவரது அண்ணன் மகனுமான ராஜூவும் மற்ற நிர்வாகிகளும் சேலம் சன்னா, இலுப்பைப்பூ சம்பா, கறுப்பு கவுனி, துளசி வாசனை சீரக சம்பா உள்ளிட்ட 5 வகை நெல் ரகங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். பாரம்பரிய நெல் வகைகளை அதிகளவில் பயிரிடவும், சத்துணவுத் திட்டத்தில் அந்த அரிசியைப் பயன்படுத்தவும் ஆவன செய்யக் கோரினர்.
காவிரி தீரத்தைச் சேர்ந்த தலைவர் கலைஞரின் மகன் என்ற முறையிலும், மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயிகளின் நலனில் தனி அக்கறை எனக்கு உண்டு. அதனால்தான், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்திருக்கின்ற கழக அரசு, அதில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதிலும் உறுதியுடன் இருக்கிறது.
வழிநெடுக பலதரப்பட்ட மக்களின் அன்பான வரவேற்பில் மூழ்கித் திளைத்தேன். திருச்சியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூருக்கு வந்து சேர்வதற்கு ஏறத்தாழ 6 மணிநேரத்திற்கு மேல் ஆனது. பயணம் முழுவதும் பொங்கி வழிந்தது மக்களின் அன்பு.. அன்பு.. பேரன்பு!
திருவாரூர் அருகேயுள்ள காட்டூரில் முத்தமிழறிஞர் கலைஞரைப் பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த புலிக்குகையாம் அன்னை அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மரியாதை செலுத்தி, அங்கே அமைக்கப்பட்டு வரும் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அருங்காட்சியகப் பணிகளையும் கழக நிர்வாகிகளுடன் பார்வையிட்டேன். அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில், பவித்திரமாணிக்கம் என்ற இடத்தில் ஒரு மாணவியும் மாணவனும் கையில் வைத்திருந்த புத்தகத்தைக் காட்டியபடி, சாலையோரம் காத்திருப்பதைக் கவனித்து, காரை நிறுத்தச் சொல்லி அவர்களை அழைந்தேன். 11-ஆம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீயும் 6-ஆம் வகுப்பு படிக்கும் நிதீஷூம் தலைவர் கலைஞரின் உரையுடன் கூடிய திருக்குறள் நூலை எனக்குப் பரிசாக வழங்கினர். அந்தப் பிஞ்சு உள்ளங்களின் பேரன்பில் மகிழ்ந்தவாறு, திருவாரூர் பெரியகோவிலின் சன்னதி தெருவில் உள்ள தலைவர் கலைஞர் வளர்ந்த இல்லத்திற்கு வந்தபோது இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் மக்களின் அன்பான வரவேற்பில் மகிழ்ந்தேன்.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் சிந்தித்துச் செயல்பட்ட போராளிக் குணமிக்க வரலாற்று நாயகர் வளர்ந்த இல்லத்தில் கால்வைத்தபோதே மெய்சிலிர்த்தது. அங்கிருந்த மூதாதையர்கள் படங்களுக்கு மரியாதை செய்தேன். காவிரி உரிமைக்காக வழக்குகள் தொடுத்தவரான மன்னார்குடி ரெங்கநாதன் அவர்கள் சந்தித்து உரையாடினார்.
ஜூலை-7 காலையில் திருவாரூர் தேரடியில் திரளாக நின்று வரவேற்பளித்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் திருவாரூரில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்புக்கான சிறப்புப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றேன். இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் வருகை தந்த தனது கோபாலபுரம் இல்லத்தையே பொதுமக்களுக்கான மருத்துவமனையாக்கிட விரும்பி உயில் எழுதிய நம் ஆருயிர்த் தலைவரின் திருவாரூரில், புதிய மருத்துவப் பிரிவைத் தொடங்கி வைப்பது அவர் வழியில் அமைந்த இந்த அரசு செலுத்தும் மரியாதையாகும்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கொரோனா பேரிடர் காலத்தில் அளப்பரிய பணியாற்றிய மருத்துவத்துறை ஊழியர்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டேன்.
நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் வளர்ந்த திருவாரூரில் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர் பிறந்த திருக்குவளைக்குப் புறப்பட்டேன். வழியில், கழகத்தின் முன்னாள் ஒன்றியச் செயலாளரும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவருமான மூத்த முன்னோடி ஆர்.பி. சுப்ரமணியன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தேன். இந்தக் கொள்கைப் பாசம்தானே தி.மு.கழகத்தைக் குடும்ப உணர்வு கொண்ட இயக்கமாகக் கட்டமைத்திருக்கிறது!
பின்னவாசல் என்ற இடத்தில் ஒரு திருமண மண்டபத்தின் முன் மணக்கோலத்தில் இருவர் காத்திருக்க, என் வாகனத்தை நிறுத்தச் செய்து, “உங்கள் திருமணத்தில் நான் கலந்துகொள்ளலாமா?” என்று கேட்டேன். “நீங்கள்தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்” என்று மணமக்கள் எஸ்.ஆர். சோப்ரா - எஸ்.இரமா ஆகியோர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த, அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துகின்ற வாய்ப்பும் அமைந்தது.
மகிழ்ச்சியான நிகழ்வுகளுடன் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை எனும் திருத்தலத்தை வந்து சேர்ந்தேன். அவர் பிறந்த இல்லத்திற்குச் சென்று, அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் சார்பிலும் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அங்கிருந்த புகைப்படக் காட்சிகளைக் குடும்பத்தினருக்கு விளக்கினேன். வெறும் புகைப்படங்களா அவைகள்? வரலாற்றுத் தடங்கள்!
தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி நினைவூட்டிய, ‘பதவி என்பது பொறுப்பு. அந்தப் பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும்’ என்ற வரிகளை மறக்காமல், அங்கிருந்த வருகையாளர் குறிப்பேட்டில் எழுதி, ‘அதை மனதில் ஏற்று, முதலமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பு எனக் கருதி என் பயணம் தொடரும்” என்ற உறுதியினையும் பதிவு செய்தேன். தலைவர் கலைஞர் தவழ்ந்த மண்ணில் இரண்டொரு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் ஓய்வறியாச் சூரியன். உழைப்பதையே முதன்மையாகக் கருதுபவர். “ஸ்டாலினிடம் தனக்குப் பிடித்தது உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு..” என்று பாராட்டியவர். கடமைகள் காத்திருப்பதை உணர்ந்து, திருக்குவளையில் உள்ளத்திற்கு உரமூட்டும் நிகழ்வுகளில் பங்கேற்றுப் புறப்பட்டேன்
காவிரி டெல்டாவின் கடைக்கோடிப் பகுதி வரை பாய்ந்தோடும் நீரையும், அதனால் நிறைந்த வயல்களையும், அதற்கு காரணமாக, கழக அரசு விரைவாகவும் முறையாகவும் மேற்கொண்ட தூர்வாரும் பணிகளையும் நாகை மாவட்டம் வெண்மணச்சேரி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டபடி திருவெண்காடு சென்றேன். அங்கிருந்து சென்னைக்குப் பயணமானபோது நாகை, கடலூர், விழுப்புரம் எனப் பல மாவட்டங்களிலும் கழகத்தினரும் பொதுமக்களும் அளித்த வரவேற்பில் மனநிறைவு கொண்டேன். நம்மை வழிநடத்திய தலைவர் கலைஞர் அவர்களுக்கு நாம் சூளுரைத்தபடி, கழக ஆட்சியை அமைத்து அதனை அவரது சொந்தத் திருத்தலத்தில் காணிக்கையாக்கிய பெருமிதத்தை அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்களிடம் பகிர்ந்து பரவசம் கொள்கிறேன்!”
இவ்வாறு மடலில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!