Tamilnadu

“சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதிலாக, மோடியே பதவி விலகியிருக்க வேண்டும்” : கே.எஸ்.அழகிரி சாடல்!

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதில், பிரதமர் மோடியே பதவி விலகியிருக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் ஆட்சியில் 108 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்றபோது, ரூ.70-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. காவிரி நீரை பல லட்சம் ஆண்டுகளாகத் தமிழ்நாடு பயன்படுத்தி வருகிறது. நதிநீர் ஓர் இடத்தில் உற்பத்தியானால் அது அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. கர்நாடகா காவிரி நீரை உற்பத்தி செய்யவில்லை.

மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடகா தமிழகத்தின் ஒப்புதலையும், ஆலோசனையையும் பெறவில்லை. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பா.ஜ.க மக்களை மதரீதியாக, சாதிரீதியாகப் பிரிக்கிறது. குறைந்த அறிவுள்ளவர்கள் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று பா.ஜ.க சொல்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. அறிவியலின்படி மூளை அனைவருக்கும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதைப் பயன்படுத்துவதில்தான் ஒவ்வொருவரும் வேறுபட்டு உயர்கிறார்கள்” எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அடிப்படைப் பொருட்களுக்கு விலையேற்றம் ஏற்படும். கலால் வரியை அதிக அளவுக்கு உயர்த்தியதால் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பொருளாதாரம் தெரியாததால் இந்தத் தவறைச் செய்துள்ளனர். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதில், பிரதமர் மோடியே பதவி விலகியிருக்கவேண்டும்” எனச் சாடியுள்ளார்.

Also Read: “புதிய ஒன்றிய அமைச்சரை சந்தித்து AIIMS மாணவர் சேர்க்கை பற்றி எடுத்துரைப்போம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்