Tamilnadu

3 காலில் தத்திச் சென்ற 4 கால் குழந்தை... சிகிச்சை அளித்து புதிய நண்பராக்கிக் கொண்ட நிதியமைச்சர்!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் வெளியே வந்துள்ளார். அப்போது காலில் காயம் ஏற்பட்ட நாய் ஒன்று தத்தித் தத்தி நடந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த அமைச்சர் உடனே காரை நிறுத்தி அதன் அருகே சென்று பார்த்துள்ளார். அங்கிருந்த காவலர்களிடம் எப்படி அடிபட்டது என்று விசாரித்துள்ளார்.

அதற்கு அவர்கள் விபத்து ஒன்றில் பின்னங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். பிறகு உடனே நாயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். அமைச்சர் பி.டி.ஆரின் இந்த நற்செயலைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகளும் மற்றும் காவலர்களும் பாராட்டியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கோட்டையை விட்டு வெளியே வரும்போது 3 கால்களில் தத்தி செல்வதைக் கண்டு காரை விட்டு இறங்கி அருகே சென்று பார்த்தேன்.

விபத்தில் பின்னங்காலில் காயம் ஏற்பட்டதாக அங்கு பணியாற்றும் காவலர்கள் என்னிடம் தெரிவித்தனர். 5 நான்கு கால் குழந்தைகளை கொண்ட எனக்கு, உடனே உதவிட தோன்றியது. இப்போது பாதுகாப்பான மிகச் சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளோம்.

விரைவில் நலம் பெற்று திரும்பியவுடன் என் அலுவலக நண்பராக கோட்டையில் சந்திப்பேன். உதவிய அனைவருக்கும் நன்றி. புதிய நண்பர்" எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சரின் இந்த பதிவை இணையவாசிகள் வைரலாக்கி, பி.டி.ஆருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: “அனைத்து மின் இணைப்புகளிலும் உயிர்காக்கும் சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும்” : புதிய விதிமுறைகள் அமல் !