Tamilnadu
"திருமண நிதி உதவி கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்" : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி!
தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், பெண்களின் திருமணத்திற்குத் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 130 பயனாளிகளுக்கு 32.5 லட்சம் நிதி உதவியும், 47.684 லட்சம் 130 பவுன் தங்கமும் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், "அ.தி.மு.க ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் சரியாக செயல்படாமல் இருந்துள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு 2 ஆயிரத்து 23 கோடி ரூபாய் நிதி தேவை என்கிற நிலை உள்ளது.
4 கிராம் என்பதை 8 கிராம் என உயர்த்தினாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. டிசம்பர் 2018 வரை தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் உரிய நிதி உதவிகளும், தங்கமும் வழங்கப்பட்டது. எனவே மீதமுள்ள பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஜூன் வரை 35 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில், கிராம குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணத்தைத் தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி, இரும்புக் கரம் கொண்டு தடுக்கும்.
அதேபோல், சில ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் விரைவில் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கிய வைப்பு நிதி பத்திரம் முதிர்வடைந்தும் பணம் திருப்பி வழங்காமல் உள்ளது. இதனை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், புதியதாக 48 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகி ஒருங்கிணைந்த மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கா ஆலோசனை வழங்கும் மையத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!