Tamilnadu
"முதலமைச்சர் பின்னால் முனைப்போடு நிற்போம், மூன்றாம் அலை வந்தாலும் முறியடிப்போம்": வி.பி.கலைராஜன் கட்டுரை!
உலகமே இன்று கொரோனா என்னும் கொடும் வைரஸால் பாதிக்கப்பட்டு என்று எழுதுவதை விட தாக்குதலுக்கு ஆளாகி சின்னாபின்னாமாகிப் போய் தப்பிக்க வழிதெரியாது தவித்து கதறுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டோம், சர்வதேச விண்வெளி மையத்தை விண்ணில் உருவாக்கி பூமியை கண்காணித்து வருகிறோம் என்று பெருமைபட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளெல்லாம் சீனாவில் உருவாக்கப்பட்டதோ அல்லது தானே உருவானதோ ஒரு வைரஸை கண்டு உதறல் எடுத்து நிற்கின்றன.
இந்த வைரஸைத்தான் மூன்று நாட்களில் ஒழித்துவிடுவேன் 7 நாட்களில் அழித்துவிடுவேன் என்றெல்லாம் பேசி தனது அறியாமையை வெளிக்காட்டினார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஒன்றிய அரசின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியோ, மகாபாரத யுத்தம் 18 நாட்களில் முடிந்தது, கொரோனாவையோ 21 நாட்களில் முடித்துவிடுவேன் என்று உலகத் தலைவர்கள் பலர் இருந்த இடத்தில் பெருமைபட பேசி மகிழ்ந்தார். எத்தனையோ 21 நாட்கள் ஓடிவிட்டன. எந்த 21 நாளை மோடி கூறினார் என்பது புரியாத புதிர்.
யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஐரோப்பிய கண்டத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதேபோல் கோபா அமெரிக்கா போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. கொரோனாவை மறந்து தங்கள் நாடுகள் விளையாடும் போட்டிகளைக் காண மக்கள் பெருந்திரளாக வருகின்றனர். பெரும்பாலோனர் முகக் கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியும் இல்லை. என்ன நடக்கப்போகிறதோ?
நாம் கூறப்போவது என்னவென்றால் பத்தாம் நம்பர் பனியன் போட்டு விளையாடுபவனெல்லாம் அர்ஜென்டினாவின் வீரர் மரடோனாவும் அல்ல மெஸ்ஸியும் அல்ல, அதேபோல் 7ம் நம்பர் பனியன் போடுபவனெல்லாம் போர்ச்சுகல்லின் ரொனால்டோவும் அல்ல. அதனை ஏன் குறிப்பிடுறேனென்றால், முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவரெல்லாம் அண்ணாவும் அல்ல கலைஞரும் அல்ல. விபத்தில் விழவேண்டியவர்கள் காலில் விழுந்தவர்கள் நானும் முதல்வராக இருந்தவன் என்று வீராப்பு பேசிடக் கூடாது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரின் முழுவடிவாய் திகழ்ந்து நாடாள்பவர் தான் அண்ணன் தளபதி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவார். பதவியேற்றவுடன் நான் முதலமைச்சர் அல்ல உங்களுக்கு பணியாற்ற வந்தவன் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொன்னார். எனது அரசு எனது ஆட்சி என்று அகம்பாவத்தோடு கூறியவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து நம் ஆட்சி, நமது அரசு என்று மக்கள் கூறிடும் வண்ணம் முதல்வராக தமிழ கத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல அயராது உழைப்பவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஐந்தரை லட்சம் கோடிக்கு மேல் கடன், எப்படி மற்றவர்கள் செய்த பாவத்திற்கு இயேசுநாதர் சிலுவையையும், முள்முடியையும் சுமந்தாரோ அதைப் போல தமிழகத்தை தனக்கு முன்னால் ஆண்ட ஆட்சியாளர்கள் செய்த பாவத்திற்கு முள் கிரீடத்தை அணிந்து முதல்வராக ஆள்பவர் தான் நம் தலைவர் தளபதி. முதல் அலையில் மூச்சுத்திணறிப்போன இந்தியாவையும், தமிழகத்தையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றி விட்டதாக மார்தட்டிக்கொண்ட மோடியும், எடப்பாடியும் இரண்டாம் அலை வந்தபோது எதிர்கொள்ள முடியாமல் எழுந்து நிற்கவே தெம்பில்லாமல் பேச்சுமூச்சில்லாமல் கோமா நிலையில் இருந்தனர். அந்த கடுமையான தருணத்தில் தான் அண்ணன் தளபதி மே மாதம் முதல் வாரத்தில் முதல்வராக மக்களால் ஆக்கப்பட்டார்.
டெல்டா பூமியில் பிறந்து டெல்டா சீமையை காத்திட ஐந்து முறை முதல்வராக இருந்து உழைத்த கலைஞரின் மகன் முதல்வராக அமர்ந்த போது தான் டெல்டா என்றுபெயரிடப்பட்ட வைரஸால் ஒரு நாளைக்கு 35000 பேருக்கு மேல் தொற்று என்று கடுமையாக பாதிக்கப்பட்டது. எல்லா வித்தைகளையும் கற்ற வித்தகர் கலைஞரின் மகன் அண்ணன் தளபதி முதல்வர் பதவியில் அமர்ந்து மக்களைக் காக்காமல் விடுவாரா? கட்சித்தொண்டர்களுக்கு ஒன்று என்றாலே துடிதுடித்துபோகும் இளகிய மனம்படைத்த முதல்வர் தமிழக மக்கள் வேதனையில் உழழும் போது வேடிக்கையா பார்ப்பார்?
நாடு காத்திட துரித நடவடிக்கை எடுத்தார். போர்காலத்தில் ராணுவத்தை அனுப்புவதைப் போல் அதிகாரிகளை, அமைச்சர்களை களத்திற்கு அனுப்பினார். அதோடு மட்டுமா தானும் உயிரை துச்சமென கருதி அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்றார். தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் அறிவித்தார்.
செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை உடனே திறக்க வேண்டுமென ஒன்றிய அரசின் பிரதமரை வலியுறுத்தினார். இல்லையென்றால் எங்களுக்கு அனுமதி தாருங்கள் நாங்கள் நடத்துகிறோம் என்றார் நம் முதல்வர். பாவப்பட்ட மக்களுக்காக பரிதாபப்படவில்லை ஆளுமைத் திறனில்லாத ஒன்றிய அரசு, இன்றுவரை அழுத்தமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி போதவில்லை அதிகப்படுத்தி தாருங்கள் என்றால் மாட்டு சாணத்தையும், கோமியத்தையும் கரைத்துக் குடி என்கிறார்கள் மதவாத கும்பலைச் சேர்ந்த ஒன்றிய மாண்புமிகுக்களும், மனிதநேயமில்லாத சில தலைவர்களும். அதுமட்டுமல்ல கொரோனா மாதா என்றும் கொரோனா தேவியென்றும் உயிர்கொல்லி வைரஸுக்கு பா.ஜ.க.ஆளும் உ.பி.யில் கோயில் கட்டியுள்ளனர். அதைப் பார்த்து தமிழகத்திலும் ஒருவர் கொரோனா அம்மன் என்று கோவில் கட்டி கும்பிடுகிறாராம். பா.ஜ.க தமிழகத்தில் வளர்கிறது என்பவர்கள் செய்யும் வேலை தான் அது. எல்லாம் சரி கொரோனா வைரஸ் பெண் என்று எப்படி கண்டுபிடித்தார்களோ? அம்மை நோய் வந்தால் மகமாயி அம்மன் என்று பெயரிட்டு வந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் மாண்டுபோயுள்ளனர்.
இளங்கோஅடிகள் காப்பியம் தந்த கவிபெருமான். அவர் ஆளப்பிறந்தவர் என்று ஆருடம் கூறியபோது இல்லை பாடப்பிறந்தவன் என்று சிலப்பதிகாரத்தை எழுதித் தந்தார். நம் அண்ணன் தளபதியும் முதல்வராக முடியாது ஜாதகத்தில் அப்படி இல்லை என்று ஜோதிடர்கள் பலர் திட்டமிட்டு பரப்பிய போதும் அதை பொய்யாக்கிக்காட்டி மக்கள் ஆதரவால் புன்னகை முகங்கொண்டு முதல்வராக அமர்ந்தார் அண்ணன் தளபதி.
ஏன் இதனைக் குறிப்பிடுகிறோமென்றால் கொரோனாவை ஒழிக்க ஒரே வழி விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைதான். தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் சரியான வழி. தெருவில், பொதுவெளியில், ஆற்றோரத்தில் என எங்கு பார்த்தாலும் வட இந்தியாவில் பிணங்கள் அநாதை பிணங்களைப் போல் எரிந்துகொண்டிருந்தன. பா.ஜ.க ஆளும் குஜராத், உ.பி போன்ற மாநிலங்களில் காணும் திக்கெல்லாம் சுடுகாடாய் மாறி பிணங்கள் எரிந்தன. கங்கை ஆறோ பிணங்கள் அதிகம் மிதந்து வந்த புனித நதியாக அல்ல பாவ நதியாக காட்சிதந்தது.
கடந்தவாரம் கொரோனா தொற்று பாதித்தவர் ஒருவரும் இங்கிலாந்தில் இல்லை என்றனர். ஆனால் தற்போதோ ரஷ்யாவிலும், இங்கிலாந்திலும் ஆம்புலன்ஸ் வரிசை கட்டி நிற்கிறது, மூன்றாவது அலை மூர்க்கத்துடன் தாக்கத் துவங்கிவிட்டது. ஆனால் நம் இந்தியாவிலோ இரண்டாம் அலையின்போது சில மாதங்கள் செய்வதறியாமல் திணறி நின்ற மோடி அரசு கடந்த மூன்று வாரத்திற்கு முன்புதான் ஒன்றிய அரசே தடுப்பு மருந்துகள் தருமென்று மாநிலங்களுக்கு அறிவித்து அனுப்பத் துவங்கியுள்ளது. அதிலும் பாரபட்சம் பா.ஜ.க ஆளும் மாநிலத்திற்கு அதிகம் தடுப்பூசி மற்ற மாநிலங்களுக்கு குறைத்து தரப்படுகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரோ மூன்றாம் அலையைத் தடுப்பதற்கு100 கோடி 30.06.2021 அன்று நிதி ஒதுக்கியுள்ளார். இதற்கு முன்பும் திரவ ஆக்ஸிஜன் ரெம்டெசிவர் போன்ற மருத்துகள் வாங்க 50 கோடி ஒதுக்கினார். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு சோதனை கிட்களை வாங்க 50 கோடி வழங்கினார். அயல் நாடுகளிருந்து ஆக்ஸிஜன் உருளைகள், செறிவூட்டிகள் வாங்க 41.40 கோடியும், கருப்புப்பூஞ்சை நோய் ஒழிக்க 25 கோடியையும் ஒதுக்கி மக்களை காப்பதே மகத்தான பணியாக கண்துஞ்சாமல் உழைக்கிறார்.
ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை 1 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், அதில் 1 கோடியே 41 லட்சத்து 940 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டதாகவும், சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பாக இருப்பதாகவும் 28.06.2021 அன்று சளைக்காமல் உழைத்து தளபதி முதல்வர் எண்ணியதை முடிக்கும் வண்ணம் செயல்படும் சகோதரர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார்.
முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்றபோது வெறும் 230 மெட்ரிக் டன் அளவுதான் ஆக்ஸிஜன் இருந்தது. தற்போது 900 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. 1 லட்சம் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, தற்போது 77 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 20 கோடி மதிப்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அரசு மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வைரஸை எதிர்கொண்டு மக்களை காத்திட டெல்டா சீமைக்கு சொந்தக்காரர் அண்ணன் தளபதி தயாராகவே இருக்கிறார். நிச்சயம் மூன்றாம் அலை வந்தால் நம் முதலமைச்சரால் முறியடிக்கப்படும்.
1933ல் அமெரிக்கா மிக இக்கட்டான நிலையிருந்தபோது 32வது அதிபராகப் பதவியேற்ற ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் Fireside Talks என்ற முறையில் தன்நாட்டு மக்களுக்கு இரண்டு Powerful words-ஐ தந்தார். அது என்ன? My Friends என்பதுதான். அப்படி அமெரிக்க அதிபராக இருந்த எவரும் கூறியதில்லை. தன் மக்களை தோழர்கள், தோழிகள், நண்பர்கள் என்றார். அந்த சொல்லே அமெரிக்க மக்களிடம் மிகப்பெரிய ராசாயண மாற்றத்தை ஏற்படுத்தியது.
Confidence, Courage, Plan and Banishing fear are the magic words that enthralled his audience. His closing words were together we can not fail என்று ரூஸ்வெல்ட் பேசினார். நம்பிக்கை, துணிவு, திட்டம், வெற்றிக்கு வழியாகும். ஒன்றாக நின்றால் நாம் தோற்கமாட்டோம் என்றார். இதனை ஏன் இங்கு கையாளுகிறேனென்றால் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து உங்களால் நான்உங்களுக்காக நான் என்று உங்களின் ஒருவனாக அதாவது மக்களில் ஒருவராக வாழ்ந்திடும் முதலமைச்சர் பின்னால் முனைப்போடு நிற்போம், மூன்றாம் அலை வந்தால் முறியடித்து வெல்வோம்.
- வி.பி.கலைராஜன்,(தி.மு.கழக இலக்கிய அணி இணைச்செயலாளர்)
நன்றி : முரசொலி
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!