Tamilnadu
“காவிரியை போல் தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு” : வைகோ ஆவேசம்!
மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் செல்லவிடாமல் தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் எம்.பி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம், நந்தி மலையில் ஊற்றெடுக்கும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக தட்சிணப் பிணாசினி ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழ்நாட்டைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாகத் தமிழகத்திற்கு உள்ளே 320 கிலோ மீட்டர் ஓடுகின்றது.
கொடியாளம் தடுப்பு அணையைத் தாண்டி, ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு வந்து சேருகின்றது.
பின்னர், விழுப்புரம் மாவட்டம் வழியாகச் சென்று கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. இதற்கு இடையில், சுமார் இரண்டாயிரம் ஏரிகளை நிரப்பி, தமிழ்நாட்டில் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றது.
தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்திற்கு வரும் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் தடுப்பதற்காக, கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்குத் திருப்பி, அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத் திருப்பதி ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல 2014இல் திட்டம் வகுத்தது.
இதற்கு முன்பே 2010இல் தென்பெண்ணை ஆற்றின் கிளையான மார்கண்டேய நதியின் குறுக்கே, தமிழ்நாடு எல்லை ஓரத்தில் 50 மீட்டர் உயரத்திற்குத் தடுப்பணை கட்டும் திட்டத்தையும் தொடங்கியது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசன திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஆனால், கர்நாடக அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் இறங்கியபோது, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண் அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து, 2019 நவம்பர் 14ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், '1956ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்படி, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பங்கீடு மற்றும் நதிநீர் சிக்கல் குறித்து மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்குமாறு தமிழ்நாடு அரசு கோராதது ஏன்?' என்று கேள்வி எழுப்பியது.
'தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்குமாறு கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை' என்று கூறி தமிழ்நாடு அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசு யார்கோல் எனும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதி மார்கண்டேய நதியின் குறுக்கே மத்திய அரசின் நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதியைப் பெற்று, ரூ.87.18 கோடி செலவில் அணை கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டது.
தற்போது, கர்நாடக அரசு, பங்காருபேட்டையைச் சுற்றியுள்ள 45 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 40 மீட்டர் உயரம், 414 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு அணையைக் கட்டி முடித்து விட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் மார்கண்டேய நதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணையால் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர்ப்பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகிவிட்டது.
அ.தி.மு.க அரசின் அலட்சியப் போக்கால் தென்பெண்ணை ஆற்றிலும் காவிரியைப் போல உரிமையை தமிழகம் பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் அமைக்க தமிழ்நாடு அரசு கேட்காதது ஏன் என்றும் கூறி, தமிழ்நாடு அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி அரசு காலம் கடந்து அரசுக்குக் கடிதம் எழுதி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலுக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்குமாறு கேட்டது. ஆனால், ஒன்றிய அரசு, 2020 ஜனவரி 20ஆம் தேதி மத்திய நீர்வளத்துறையின் தலைவர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து, பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தது.
இக்குழுவில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர்கள், ஒன்றிய வேளாண் துறையின் இணைச் செயலாளர், ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் இணைச் செயலாளர், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹைட்ராலஜியின் இயக்குநர், ஒன்றிய நீர்ப்பாசன மேலாண்மை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
ஒன்றிய அரசு அமைத்த இக்குழு, 2020 பிப்ரவரி 24 மற்றும் ஜூலை 7ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 2020 ஜூலை 31ஆம் தேதி மத்திய அரசுக்குத் தனது அறிக்கையை அளித்தது. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால், ஒரு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்று பேச்சுவார்த்தைக் குழு பரிந்துரை செய்தது. ஆனால், ஓராண்டு காலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதில் முடிவெடுக்காமல் தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
காவிரி உரிமையைத் தட்டிப் பறித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்த மத்திய அரசு, தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலிலும் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி, 7.2.2018, 15.11.2019 ஆகிய இரு தேதிகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அ.தி.மு.க அரசு செயலற்றுக் கிடந்தது. தமிழ்நாடு அரசு உடனடியாகச் செயல்பட்டு, மார்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் செல்லவிடாமல் தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த வலியுறுத்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!