Tamilnadu

“ஆதரவற்றோர் காப்பகம் எனும் பெயரில் குழந்தைகள் கடத்தல்” - தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் கைது!

மதுரையில் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இதயம் அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட ஆதரவற்றோர் மையத்திலிருந்து கடந்த 29ஆம் தேதி இரு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடத்தப்பட்ட 2 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். மேலும், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 73 பேர் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில, தேனி மாவட்டம் போடி அருகே தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் போலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மற்றும் மாதர்ஷா வழக்கின் முக்கிய குற்றவாளிகள் என்பதால் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து போலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்கள் என்றும் உறுப்பு மாற்று விற்பனை தொடர்பாக ஏதும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

Also Read: மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்... தூத்துக்குடி அருகே பயங்கரம்!