Tamilnadu

"நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!

சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொங்கிவைத்து உரையாற்றுகையில், “ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து விரைவில் அறிக்கை தயாரிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

பாலம் கட்டும் பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தலாம் என்றும், எம்.சாண்டின் தரத்தினைப் பொறுத்தவரையில் கண்காணிப்புப் பொறியாளரும் மற்றும் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளரும் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

ஒப்பந்ததாரர்கள் பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாக மின் கம்பங்கள் மாற்றுதல், குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்றவற்றைச் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக முன்னதாக விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்வது என்றும், சென்னையில் சாலைப் பணிகளை இரவு நேரத்தில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் காவல்துறையின் முறையான அனுமதியைப் பெற உள்துறைச் செயலாளர் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் மூலம் கடிதம் எழுதலாம் என்றும், பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் வாடகை உயர்வு மற்றும் பணிகளின் மதிப்பீட்டை இன்றைய விலை நிலவரப்படி உயர்த்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டன.

இதுபோன்ற ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகுதான் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் என்ற அரசு ஆணையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழுக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது." என தெரிவித்துள்ளார்.

Also Read: படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் 'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!