Tamilnadu

"ஊகத்தின் அடிப்படையில் விளம்பர நோக்கில் பா.ஜ.க தொடர்ந்த வழக்கு": உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க பொதுச்செயலாளர் தாக்கல் செய்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ளக் கோரி, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி தி.மு.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பொது பள்ளி நடைமுறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களில், தமிழ்நாட்டில் 1984ம் ஆண்டு முதல் அமலில் இருந்த நுழைவுத்தேர்வு, 2006ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது எனவும், அதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் மனுதாரரின் கட்சி உறுப்பினர், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறியுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய குழு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு இன்னும் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு அறிக்கை அளிக்கும்பட்சத்தில் அதன் மீது தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியாமல், முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியல் சாசன வரம்புக்கும், அதிகாரத்துக்கும் உட்பட்டுத்தான், தமிழ்நாடு அரசு இக்குழுவை அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் ஆட்சேபனைகள் மற்றும் சட்டமன்றத்தின் விருப்பத்துக்கு முரணாக நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைத்துள்ளதாகவும், குழுவை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்குடன் வரும் ஜூலை 5ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

இந்நிலையில், வழக்கு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இன்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என ஆய்வு செய்யவே நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டதன் மூலம் மனுதாரர் நாகராஜனின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் மனுவில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

குழுவின் அறிக்கை அரசின் நடவடிக்கை குறித்து ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அரசியல் கட்சியைச் சேர்ந்த இவர், இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பது பற்றி மனுவில் குறிப்பிடவில்லை. இதுவரை குழுவிற்கு 84,343 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நீட் பாதிப்பு குறித்து பெற்றோர், மாணவர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மனுதாரர் மாணவரோ, பெற்றோரோ கிடையாது. இந்நிலையில் அரசியல் கட்சியின் நிர்வாகியான இவர் எப்படி வழக்கைத் தொடர முடியும். இது ஒரு விளம்பர நோக்கில் தொடரப்பட்ட வழக்கு. நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர், சம்பந்தப்பட்டவர்களின் குறைகளைக் கேட்கவேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கமிட்டி அமைக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் சாசனத்தின் எந்த விதியும் மீறப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறவில்லை. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். ஆகவே, நாகராஜன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “முந்தைய அ.தி.மு.க அரசு ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டு!