Tamilnadu

காலணி தயாரிக்கும் ஊழியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை சிறு - குறு நிறுவனங்கள் சந்தித்து வந்தன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பல்வேறு சலுகை மற்றும் நலதிட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

குறிப்பாக தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. அந்தவகையில், தொழிற்சாலைகள் மற்றும் சிறு - குறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், ஊதியத்தை நிர்ணயம் செய்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை வெளியீடுள்ளது. அதன்படி, காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகராட்சிகள், மாநகராட்சிகள் பணிபுரிவோருக்கு தனியாகவும், இதர பேரூராட்சிகள், ஊராட்சிகள் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாநகராட்சிகளில் பணிபுரிந்து வரும் காலணி தயாரிக்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 4 ஆயிரத்து 933 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேரூராட்சிகள் நகராட்சிகள் பணிபுரிவோருக்கு 4 ஆயிரத்து 843 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கணக்காளர், ஸ்டோர் கீப்பர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், வாட்ச்மேன் என அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஊதியம் அதிகமான தொகையாக வழங்கப்பட்ட வந்தால் அதை தொடர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் ஊதியத்தை சமமாக பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அரசாணைக்கு பலரும் தங்களின் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “மருத்துவர்களைப் பாதுகாக்கும் முன்கள வீரராக தமிழ்நாடு அரசு செயலாற்றும்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!