Tamilnadu
“மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்களிடம் இருந்து ஒரு பைசா கூட பெறப்படாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு!
மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கும் பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால், தற்போது அந்த செலவினங்களை மின்வாரியமே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மதுரை மண்டல மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்துப் பேசினார்.
வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, திண்டுக்கல் எம்.பி செல்வராஜ், ராமநாதபுரம் எம்.பி நவாஷ்கணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், தமிழரசி, மாங்குடி, காமராஜன், சரவணகுமார், காதர்பாட்ஷா, முருகேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாடு முழுவதும் 9 மண்டலங்களில் மண்டல வாரியாக உதவிப் பொறியாளர்கள் முதல் மண்டலப் பொறியாளர்கள் வரை பங்கேற்கும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன் 9 மாதங்களாக மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்த பராமரிப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அப்பணிகள் தற்போது நிறைவு பெறுகிறது.
இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மின் நுகர்வோர் சேவை மையத்தில் வரக்கூடிய அழைப்புகள், கோரிக்கைகள் மற்றும் புகார்கள் பற்றி ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற முடிவு செய்துள்ளோம். உற்பத்தியாகக் கூடிய மின்சாரத்திற்கும், விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. இதனால், மின்வாரியத்திற்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைச் சரி செய்வதற்கு ஸ்மார்ட் மீட்டர்தான் சரியாக இருக்கும். வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வணிகத்திற்கும் தனித்தனி மீட்டர் உள்ளது. விவசாயத்திற்கு மட்டும் மீட்டர் இல்லாமல் உள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக தவறுகள், நிர்வாகக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
அதனால், மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் சரி செய்வதற்கும், இழப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வகையில் சரி செய்யலாம் என்பது ஆய்வு செய்து வருகிறோம்.
கிராமப்புறங்களில் புதிய மின் இணைப்பு, மின்மாற்றிகள் மாற்றவும், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு அமைக்கப்படும் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அமைப்பதற்கான செலவினங்களை மின்வாரியத்தால் செய்ய முடியாதநிலை ஏற்பட்டது.
அதை பொதுமக்களிடமே மின்வாரியம் இதுவரை வசூலித்து வந்தது. அதை மாற்றி, இதுபோன்ற பணிகளுக்காக ஒரு பைசா கூட பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால், தற்போது அந்த செலவினங்களை மின்வாரியமே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!