Tamilnadu
"பின்தங்கிய மக்கள் என யாரும் இருக்கக்கூடாது;அதுவே உண்மையான வளர்ச்சி": SDPC கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு
மாநில வளர்ச்சிக் கொள்கை குழு தமிழ்நாடு அரசு செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும் என மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், மாநில திட்டக்குழுவை, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்தார். பின்னர் மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும் என்றும் பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இல்லாத வகையில், தமிழ்நாடு ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத நிலையான வளர்ச்சி அடைவதை நோக்கிய திட்டமிடுதல் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும் உரையாற்றினார்.
மேலும், பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்துச் செயல்பட்டதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து பாராட்டி உள்ளதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல, நிதி மூலதனம் மட்டுமல்ல வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்கவேண்டும்.
மாநில வளர்ச்சி கொள்கை குழு தமிழ்நாடு அரசு செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக நல்வழி காட்டவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக இக்கூட்டத்தில் வரவேற்றுப் பேசிய மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் ராம சீனிவாசன், விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், தீனபந்து, டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!