Tamilnadu

“கனிமவள கொள்ளை.. மணல் கடத்தல் மாஃபியா” : அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் குண்டர் சட்டத்தில் கைது!

திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன் (46). இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளர்.

திருப்பதி பாலாஜி, கட்டப்பஞ்சாயத்து, மண் மற்றும் மணல் கடத்தல், தொழிலதிபர்கள், நில வணிகர்கள் மற்றும் மக்களை மிரட்டிப் பணம் பறித்தல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் உட்பட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

திருப்பதி பாலாஜி மீது இதுவரை திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், கிராமியக் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், கிழக்குக் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருப்பதி பாலாஜி, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் திருப்பதி பாலாஜி மீது திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமத்தில், 38 அரசு இடத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிராமியக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருப்பதி பாலாஜி கைது செய்யப்பட்டு போளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கட்டப்பஞ்சாயத்து மற்றும் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருப்பதி பாலாஜியின் சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, போளூர் கிளைச் சிறையில் இருந்த திருப்பதி பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கிராமியக் காவல்துறையினர் வழங்கி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Also Read: “மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்களிடம் இருந்து ஒரு பைசா கூட பெறப்படாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு!