Tamilnadu

கல்லூரிகள் திறப்பா? - பல்கலை. மாணவர் சேர்க்கை.. வகுப்புகள் நடத்துவது குறித்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக, பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது மற்றும் முடிவுகளை வெளியிடுவது தொடர்பாகவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையை எவ்வாறு மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசின் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் இதர நிர்வாக ரீதியான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, பணியிடங்களை நிரப்புவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்த பின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: “1 லட்சம் பேர் முறைகேடு செய்தார்களா?” - அண்ணா பல்கலைக்கழக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி - அடுத்தது என்ன?