Tamilnadu

முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்ட ALCAZAR கார் யாருக்கு விற்பனை? : Hyundai நிறுவனம் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக ஹூண்டாய் கார் நிறுவனம் கால் பதித்தது. சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு தொழிற்சாலை உருவாது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு 1996-ம் ஆண்டு டிச.10-ம் தேதி அடிக்கல் நாட்டினார் கலைஞர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே இந்த நிறுவனத்தில் பெரும்பான்மை வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கான உத்தரவாதத்தையும் ஹூண்டாய் நிறுவனத்திடம் அப்போதே பெற்றுத் தந்தார்.

1999-ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் தனது‘அக்சென்ட்’ காரை தயாரித்து வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் பங்கேற்று, வாடிக்கையாளர்களுக்கு காரின் சாவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நேற்று ஒரு கோடியாவது காரை தயாரித்து வெளியிட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்து, அந்தக் காரின் பானெட்டில் கையெழுத்திட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது காரை அறிமுகம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1996–க்கு முன்பு பூந்தமல்லியைத் தாண்டினால், இங்கே நகரம் இருப்பதே தெரியாது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் இப்போது உலகளவில் பிரபலம் என்றால், அதற்குக் காரணம் கலைஞரும் ஹூண்டாயும்.” எனப் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது தயாரிப்பான ‘அல்கஸார்’ காரை வாங்குவதற்காக பலரும் விசாரித்துள்ளனர்.

ஆனால், ஹூண்டாய் நிறுவனம், முதலமைச்சர் கையெழுத்திட்ட கார், தொழிற்சாலையில் நினைவுப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Also Read: கலைஞர் தொடங்கிவைத்த ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது தயாரிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!