Tamilnadu

“அதிமுக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.44 கோடி ஊழல் முறைகேடு”: CAG அறிக்கையில் அம்பலம்!

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி அ.தி.மு.க ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ரூ.44.24 கோடி ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக இந்திய தணிக்கைதுறை அம்பலப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தணிக்கைதுறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் மூலம் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள், தாம் மேற்கொள்ள உள்ள கட்டுமான பணிகளின் மதிப்பீட்டு தொகையில் ஒரு சதவீத தொகையை நல வாரியத்தின் பொதுநல நிதிக்கு வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் கட்டிட அனுமதியை அளிக்கும் நேரத்தில் அந்த தொகையை வசூலித்து நல நிதிக்கு செலுத்துகின்றன.

இந்த நிதியை அரசின் வேறு எந்த வகையான செலவிற்கும் பயன்படுத்தக் கூடாது என கடந்த 2012 பிப்ரவரி 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-18ம் கால கட்டத்தில் நலவாரியம் ரூ.1333.92 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியெதற்கு எதிராக விழிப்புணர்வு முகாம், திருமண உதவி, கல்வி உதவி, விபத்து மரணம், இறுதி சடங்கு உதவி மற்றும் இதரவகையில் ரூ.22,469 கோடியை செலவழித்தது.

நல வாரிய செயலாளரின் 2016 செப்டம்பர் முதல் 2017 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் ஆவணங்களின் மீது ஆய்வு செய்யப்பட்டதில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தொழிலாளர் துறைக்கான அலுவலகங்களை கட்ட நல நிதியில் சேர்ந்துள்ள தொகையை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தொழிலாளர் துறைக்காக மாவட்டங்களில் மாவட்ட தொழிலாளர் அலுவலக வளாகங்களை கட்ட கடந்த 2012 மார்ச் 16ம் தேதி தொழிலாளர் வேலை வாய்ப்புத் துறையின் சீராய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர் அலுவலர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களை கொண்ட ஒருங்கிணைந்த அலுவலக வளாகங்களை 20 மாவட்டங்களில் கட்டுவதற்கு தொழிலாளர் ஆணையர் அரசுக்கு ஆகஸ்ட் 2013ல் கருத்துரு அனுப்பினார்.

அந்த வளாகங்களில் ஒரு கணிசமான பகுதியை தொழிற்துறை அலுவலகம் பயன்படுத்தும் என்பதன் அடிப்படையில் வளாகங்களை கட்ட நல நிதியில் சேர்ந்துள்ள தொகையை பயன்படுத்தலாம் என ஆணையர் முன்மொழிந்து, நல நிதியில் இருந்து ரூ.40 கோடியை பயன்படுத்த அரசின் ஒப்புதல் கோரினார்.

நல நிதியில் உள்ள தொகையை பயன்படுத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் விதியை மீறி கடந்த 2012 பிப்ரவரியில் நல நிதியை பயன்படுத்தி 20 மாவட்டங்களில் ரூ.40.50 கோடியில் தொழிலாளர் அலுவலகங்களை கட்டுவதற்கு தமிழக அரசு 2013 அக்டோபரில் ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து 2014 பிப்ரவரி 28ம் தேதி நடை பெற்ற கூட்டத்தில் நல வாரியம் ஒப்புதல் வழங்கி பொதுப்பணித் துறைக்கு கடந்த 2015-17 வரை நான்கு தவணைகளில் மொத்தம் ரூ.44.24 கோடி விடுவித்தது. இது, உச்சநீதிமன்ற தீர்ப்பையும், சட்டத்தையும் மீறிய செயலாகும்.