Tamilnadu

“எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்கக்கூடிய அரசாக தி.மு.க அரசு உள்ளது” : அமைச்சர் ரகுபதி பேட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குழிபிறை பேருந்து நிலையம் அருகே உள்ள வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வீட்டுமனை பட்டா முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை, காதுகேளாதோருக்கான கருவி உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், “ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் மரியாதை கொடுக்கக் கூடிய அரசாக தி.மு.க உள்ளது. மேலும் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டான அரசாக உள்ளது.

கடந்த காலங்களில் அரசு விழாக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாது. மேலும், அப்படியே விழாக்களில் கலந்து கொள்ள வந்தாலும் மேடையிலிருந்து கீழே தள்ளுவது, வழக்கு போடுவது என பல்வேறு இன்னல்களை கொடுத்தனர். ஆனால் தற்போதைய தமிழ்நாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ராஜமரியாதையுடன் அழைத்து, அவர்களின் கருத்து கேட்கக்கூடிய சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொடுத்துள்ளார்.

இதையே அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அரசுக்கு மிரட்டல்களை விடுத்தார்கள். ஆனால் ஒரு போதும் அதற்கு அஞ்ச மாட்டோம். தி.மு.க பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது. தங்களைப் பற்றி என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு மின் பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை, அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று அறிந்ததால் அவர்கள் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவில்லை. அதனால் ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தற்போது பராமரிப்பு பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. பராமரிப்பு பணியும் முடிவடைந்து மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 543 பேர் 3 லட்சம் ரூபாய் தக்கல் திட்டத்திலே பணம் கட்டிவிட்டு விவசாயிகள் மின்சாரத்திற்காக தற்போது வரை காத்திருக்கின்றனர்.

மின்மிகை மாநிலமாக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மின்சாரம் கொடுத்திருக்கலாமே, 543 பேர் எத்தனை ஆண்டுகாலம் காத்திருக்கின்றனர். மூன்று லட்ச ரூபாய் கட்டி உள்ள விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கி நகைகளை அடகு வைத்து கஷ்டப்பட்டு கட்டியுள்ளனர். மின்சாரம் உடனே வழங்குகிறோம் என்று தட்கல் திட்டத்தில் பணத்தை வாங்கி அந்த பணத்தை எங்கு கொண்டு கொடுத்தீர்கள்?

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 543 பேர் என்றால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்காணக்கானோர் பணத்தை கட்டிவிட்டு காத்துள்ளனர். இவர்கள் மூலம் அரசுக்கு வந்த பல்லாயிரம் கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒவ்வொரு துறையிலும் கணக்குகள் பார்த்து எங்கெங்கு யார் யார் தவறு செய்துள்ளனர் என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்து யாரும் தப்பமுடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்தகால அ.தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி வந்துள்ளது. நம்மிடம் பணத்தை வாங்கி அதிகமாக பணம் கொடுத்து மின்சாரத்தை வாங்கினார்கள். அதுதான் உண்மை. ஆனால் நாங்கள் பொதுமக்களின் பணத்தை நிச்சயமாக வீணடிக்க மாட்டோம், அதிக விலை கொடுத்து எந்த பொருளையும் வாங்க மாட்டோம். எல்லாம் சட்டப்படி நடக்கும் இது மக்களுக்கான அரசாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் ஆவின் பணி நியமனத்தில் ஊழல் முறைகேடு” : அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்!