Tamilnadu

“அ.தி.மு.க ஆட்சியின் தகிடுதத்தங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சி.ஏ.ஜி அறிக்கை” : முரசொலி தலையங்கம்!

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியின் மின்சாரத் துறை தகிடுதத்தங்கள் மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது மத்திய தணிக்கைத் துறை அறிக்கை என்ற சி.ஏ.ஜி அறிக்கை!

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்லி இருந்தார். இதனைப் பார்த்து, திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல அரண்டது அ.தி.மு.க மகா யோக்கியர்களைப் போல அதற்கு பதில் சொன்னார்கள். “ஆண்டுதோறும் தணிக்கைத் துறை அறிக்கை வருகிறதே? பிறகு என்ன புதிதாக வெள்ளை அறிக்கை வைக்கப்போகிறீர்கள்?” என்று மகா புத்திசாலியைப் போல பழனிசாமி சொன்னார்.

ஆண்டுதோறும் தணிக்கைத் துறை அறிக்கையை அரசுக்குத் தருவது உண்மைதான், அந்தத் தணிக்கைத் துறை அறிக்கையைத்தான் நீங்கள் சட்டப்பேரவையில் வைக்கவில்லையே என்றார் பழனிவேல் தியாகராஜன். அதற்கு பழனிசாமி பதில் தரவில்லை. இப்படி மறைக்கப்பட்ட அறிக்கையைதான் தி.மு.க. ஆட்சி, பேரவையில் வைத்துள்ளது. அதில் மிக முக்கியமானது மின்சாரத்துறை குறித்த குறிப்புகள். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் முறையற்ற நிர்வாகச் சீர்கேடு காரணமாக சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

2018 - 19 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அவர் தலைக்குவைத்து தூங்கிவிட்டார். அந்த அறிக்கைதான் இப்போது தூசி தட்டிஎடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணி அப்படியே மறைக்கப் பார்க்கிறார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் மின்சார வாரியத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். “தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மொத்தம் ரூ.13,176 கோடி இழப்பு என்று தணிக்கை அறிக்கை சொல்கிறது.

மின்சார கொள்முதல் உற்பத்தி செலவு, பணியாளர் மற்றும் நிதி செலவினங்களே இழப்பீட்டுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. எங்கேயும் தவறு நடந்ததாகச் சொல்லவில்லை. பொதுவாக தணிக்கைத் துறை இது போன்ற கருத்துக்களைத்தான் தெரிவிக்கும். ஆனால் முறைகேடு எதுவும் இல்லை” என்று தங்கமணி சொல்லி இருக்கிறார்.

அவர் தணிக்கை அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த மாதத்துக்கான தணிக்கை அறிக்கைதான் வெளியாகி உள்ளது. இதில் மின்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்துறை நிறுவனங்களுக்கு 2014ம் ஆண்டுமுதல் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 763 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ரூ.13,176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மின் கொள்முதல்தான். அதாவது மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்த முனைப்பும் காட்டாமல், தமிழ்நாட்டில் இருக்கிற மின் திட்டங்களை செழிப்பாக்க எந்த முயற்சியும் எடுக்காமல் தனியாரிடம் இருந்து வாங்குவதில் தங்கமணி குறியாக இருந்துள்ளார். இது மோசடியில் நூதனமானது. என்னிடம் இல்லை, அதனால் வாங்குகிறேன் என்பதாகும்.

அரசின் சார்பில் தயாரிக்காதீர்கள், எங்களிடமே வாங்குங்கள் என்பதுதான் இதனுள் உள்ள சூட்சுமம். அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத்தனத்தை இந்த அறிக்கை சொல்லி இருக்கிறது. சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவு திறன் தேவையான அளவு அதிகரிக்கப்படவில்லை என்று இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.

தமிழ்நாட்டில் இருந்த அரசு மின் உற்பத்தி நிலையங்களின் குறைந்த செயலாற்றலே இருந்ததாக இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ஒன்றிய அரசின் மின் உற்பத்தி நிலையத் திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தையும் இந்த அறிக்கை கண்டித்துள்ளது.

இவை அனைத்தும் தங்கமணிக்கு குற்றச்சாட்டுகளாகத் தெரியவில்லையா? தனியாரிடம் மின்சாரம் அதிகளவு கொள்முதல் செய்வதன் மூலமாக அவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதுதான் தி.மு.க ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டு. இதுபோன்ற மின்சாரக் கொள்முதல் தேவையை திட்டமிட்டு எதற்காக தமிழ்நாட்டுக்கு உருவாக்க வேண்டும்? இப்படி உருவாக்கப்பட்ட நோக்கத்தின் பின்னணியால் அடைந்த லாபம் என்ன என்பதுதான் மத்திய தணிக்கை அறிக்கை மறைமுகமாக எழுப்பும் கேள்வி.

மத்திய தணிக்கைத் துறை அறிக்கையால் மட்டுமே இது வெளிச்சத்துக்கு வந்தது அல்ல. மக்கள் மன்றத்தில் தி.மு.க.வால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுதான் இது. ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் தங்கமணி மறுக்கவில்லை. கடந்த வாரம் சட்டமன்றத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பிய போதும், தங்கமணி சபையில்தான் இருந்தார். பதில் சொல்வதற்கு கையைக்கூடத் தூக்கவில்லை. ஏன் தங்கமணி பதுங்கினார் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை சொல்லிவிட்டது. இதனால் தான் அதனை மறைத்து வைத்திருக்கிறார்கள். இனி ஒவ்வொரு மர்மமாக அவிழும்!

Also Read: “நிதிநிலை சீரானதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்” : நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் உறுதி!