Tamilnadu

தமிழ்நாட்டுக்கு துணை நகரங்கள் அமைக்க ஆய்வு; ஆட்டோ நகரங்களாகும் கோவை, ஈரோடு? - அமைச்சர் முத்துசாமி தகவல்!

சென்னை தலைமை செயலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 28 கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சி.எம்.டி.ஏ மற்றும் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு என ஒவ்வொரு துறையையும் ஆய்வு மேற்கொண்டு முன்னேற்ற பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள், காலிப் பணியிடங்களை நிரப்புவது, பதவு உயர்வில் காலதாமதம், பணியாற்றும் ஊழியர்கள் இறந்துவிட்டால் வாரிசுதாரர்களுக்கு பணி அளிப்பது, ஓய்வூதியம் அளிக்க முறையான ஏற்பாடுகள் உள்ளிட்ட 28 கோரிக்கைகளையும் துறையின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாகவும், ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வீட்டு வசதி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்றும், ஒவ்வொரு இடத்திலும் அலுவலகங்கள் ஏற்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

Also Read: "தேர்தலுக்காக கொடுத்த பணத்தை திருடிட்டீங்க" : கொதித்தெழுந்த சி.டி.ரவி.. பீதியில் தமிழ்நாடு BJP தலைவர்கள்!

முக்கிய நகரங்களில் துணை நகரங்கள் செயல்படுத்த ஆய்வு பணி துவங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாடல் நகரமாக அமைய வேண்டும் அந்த வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சி.எம்.டி.ஏவில் வருகின்ற கோப்புகளை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பல வீடுகள் முறையான பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதாகவும், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

சி.எம்.டி.ஏ மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும்,கோயம்பேடு அங்காடியை நாளை காலை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் இருக்கும் சிறப்பிற்கு ஏற்றார்போல் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Also Read: 10 ஆண்டு கோரிக்கையை 4 நாட்களில் முடித்துக்கொடுத்த அமைச்சர் முத்துசாமி : குவியும் பாராட்டு!