Tamilnadu
பொற்காலத் தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்குவார் எனக் கட்டியம் கூறும் ஆளுநர் உரை!
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் 16-வது சட்டமன்றத்தொடரின் தொடக்கமாக ஆளுநர் உரையுடன் 21.06.2021-ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் புதியதாக மு.க.ஸ்டாலின் தலைமையில்அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் கொள்கை கோட்பாடுகளையும், எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் விளக்கி உரையாற்றினார்.
அவரது உரையினைத் தொடர்ந்து 24.06.2021-ஆம் தேதி வரையிலும் சட்டமன்றம் நடைபெறுமென பேரவைத்தலைவர் அலுவலாய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவித்துள்ளார். சட்டமன்ற நடவடிக்கை மரபுகளின்படி ஆளுநர் உரையென்பது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும், திட்டங்களையும் விளக்கிடும் உரையாகத்தான் அமையும். அதுதான் மரபும் ஆகும். இது ஒரு சட்டமன்ற ஜனநாயக வழக்கமாகும். இம்முறை ‘ஆளுநர் உரை’ என்பது, தமிழ்நாட்டை எல்லாத் துறையிலும், வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், வழிகாட்டும் மாநிலமாகவும் உருவாக்கும், கொள்கைகளையும் திட்டங்களையும் உள்ளடக்கியதும் காலமாற்றங்களையும் அறிவியல் வளர்ச்சியையும் கணக்கிலெடுத்துக் கொண்ட ஒரு புதுமையான ஆளுநர் உரையாகும்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வற்ற சமூகக்கட்டமைப்பு, சமூகநீதி, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசில் உரிய இடம், தமிழ்நாட்டின் விவசாயத்தினை, நவீன அறிவியல் உத்திகளைப் பயன்படுத்திப் பெருக்கிடவும், உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை இடைத்தரகர்கள் தயவின்றி நேரடியாக கட்டுப்படியான விலைக்கு விற்கும் வாய்ப்புகளை உள்ளடக்கிய உழவர் சந்தைகளின் மீட்டுருவாக்கம், ஆகிய இந்த ஏற்பாடுகளின் உச்சமாக, விவசாயத்திற்கென தனிநிதிநிலை அறிக்கை!
தோட்டக்கலை கட்டமைப்பு உருவாக்கம்!
அதுமட்டுமல்ல, விவசாயத்துடன் தொடர்புள்ள தோட்டக்கலை கால்நடைகள்பராமரிப்பும், பெருக்கமும் ஆகியவைகளுக்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்படவிருக்கிறது. இனி கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் உலகத்தவரை உய்விக்கும் வேளாண் தொழிலில் உற்சாகமாக ஈடுபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
கடந்தகால எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஊழல் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு, கடன் சுமை ஆகியவற்றின் சரியான புள்ளிவிவரங்களை வெள்ளை அறிக்கை மூலம் தமிழ்நாடு அரசு பகிரங்கமாக வரும் ஜூலை மாதம் தெரிவிக்கவுள்ளது. தமிழ்நாட்டின் இன்றைய நிதி ஆதாரங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, பொருளாதார அறிவாற்றலிலும் ஆய்விலும் தலைசிறந்த விற்பனர்களாகவும், உலகம் அறிந்த பொருளாதார நிபுணர்களாகவும் அறியப்பட்ட ஐவர் பொருளாதார ஆலோசகர்களாக நியமிக்கப்படுவதாகஆளுநர் உரை தெரிவிக்கிறது.
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ்தர் டப்ஃலோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராகவும், அகில உலக அளவில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவருமான பேராசிரியர் ரகுராம்ராஜன், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக 2014-2018-ஆம்ஆண்டுகளில் பணியாற்றியவரும், பல்வேறு உலகம் தழுவிய அமைப்புகளில் பணியாற்றியவருமான அரவிந்த் சுப்ரமணியம், பொருளாதாரத்தில் நிறைந்த பயிற்சி பெற்றவரும், அம்ரித்தா ஜென்னுடன் இணைந்து பல பிரசித்திபெற்ற பொருளாதாரம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படைத்தவருமான ஜீன் டிரஸ்சி, இந்திய ஒன்றியப் பிரதமருக்கு 2003-2004-ஆம் ஆண்டுகளில் பொருளாதார ஆலோசகராக இருந்தவருமான எஸ்.நாராயணன் ஆகியோர் அந்தப் பொருளாதார நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கவனத்தை ஈர்த்த வல்லுநர் குழு!
தமிழ்நாடு ஆளுநர் உரையில் இந்த குழு தொடர்பான அறிவிப்பு இந்திய நாட்டின் முழுமையான கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை யாராலும் மறுக்கவியலாது. அதுமட்டுமல்ல - பலரை ஆச்சரியத்திலும், திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது!! இந்த நிபுணர்குழு உருக்குலைக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பை சரி செய்வதற்கான ஆலோசனைகளையும், முதலீடுகளை பெரும் அளவு அதிகப்படுத்துவதற்கும், திட்டங்களின் பயன் சமூகத்தின் எந்தப் பிரிவினருக்குச் சென்றடைய வேண்டுமோ அந்தப் பிரிவினருக்குச் சென்றடைய வழிவகைகளை உருவாக்கி வழங்கும். இத்தகைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் எல்லா வசதிகளையும், வாய்ப்புகளையும் பெற்ற நிறைவான மகிழ்ச்சிகரமான சமூக அமைப்பை தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் கட்டமைக்க விரும்புகிறார் என்பது தெளிவாகும்.
மீனவர் நலனுக்கு தேசிய ஆணையம்!
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அந்த உயர்ந்த வாழ்க்கை மேம்பாட்டை அடைவதற்கு முன்னர் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினருக்கு உரிய தீர்ப்பும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டின் நீண்ட கடற்கரைப்பகுதியில் கடற்பரப்பினையே வாழ்வாதாரமாக ஏற்றுக்கொண்ட மீனவர்களின் வாழ்க்கை இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவதோடு, இலங்கை கடற்படையாலும் பாதிக்கப்படுகிறது. இந்த அவலங்களும், துயரங்களும் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்தத் துயரங்களிலிருந்து விடுபடுவதற்கு கச்சத்தீவு ஒரு காரணமெனில், கச்சத்தீவை மீட்பதற்கும் ஒன்றிய அரசு தயாராக வேண்டுமென ஆளுநர் உரை வலியுறுத்துகிறது.
அதுமட்டுமல்ல - மீனவர் நலனுக்கான தேசிய ஆணையம் ஒன்றும் நிறுவப்பட வேண்டும்மெனத் தெரிவிக்கிறது. வாழ்க்கையே போராட்டக்களமாக மாறிவிட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு; குறிப்பாக அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்களுக்கு, குடியுரிமை வழங்குவதோடு ஈழத்தமிழர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்கிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென ஆளுநர் அறிக்கை வலியுறுத்துகிறது.
துணைக்கோள் நகரங்கள்!
மேலும் நகர்ப்புற வரம்புமீறிய மக்கள் பெருக்கத்தையும் நெருக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவர, “துணைக்கோள்” நகரங்களை உருவாக்கி நகர்ப்புற மக்கள் பெருக்கத்தையும், நெருக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளையும், சலுகைகளையும் முழுமையாகப் பாதுகாக்கும் முறையில் 2016ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பிரிவுகளை உரியமுறையில் அமல்படுத்தப்பட வேண்டுமெனவும், திருநங்கைகளுக்கு உரிய வேலைவாய்ப்புகளும், சுயவேலைவாய்ப்புகளும் உருவாக்கித்தருமெனவும் ஆளுநர் அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவ-பொறியியல் தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு குறித்து ஆய்வு செய்வதற்கு, தமிழ்நாடு அரசு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்தக்குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் அந்த அடிப்படையில் சட்டமியற்றி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவ-பொறியியல் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் ஆளுநர் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தொடக்க அமர்வில் ஆளுநரின் தொடக்க உரையில் புதியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு எத்தகைய இலக்கு நோக்கிப் பயணிக்கும் என்பதை மிகத்தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு இலக்கினை எட்டுவதற்கும் தகுதியுள்ள வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்பாடுகளின்றிப் பயணிப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுவிட்டன. கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கவிருக்கும் தமிழ்நாடு அரசு எத்தகைய தமிழ்நாட்டை உருவாக்கவிருக்கிறது என்பதற்கு அவர் நமக்கு வழங்கிய முழக்கங்களே எதிரொலிக்கும்.
1. வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு
2. மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி
3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாததண்ணீர்
4. அனைவருக்கும் உயர்தரக்கல்வி மற்றும்மருத்துவம்
5.எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்
6.உயர்தர ஊரகக் கட்டமைப்பு - உயர்ந்த வாழ்க்கைத்தரம்
7. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்
மவுனப் புரட்சி!
ஆளுநர் உரையின் இலக்கு என்பது கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சரின் இந்த 7 முழக்கங்களை நோக்கியே பயணிக்கும். இந்த அரசின் ஆளுநர் உரையின் உள்ளடக்கம் ஓர் “மவுனப்புரட்சி” என்பதை காலச்சுழற்சி படிப்படியாக வெளிப்படுத்தும், தமிழ்நாடு என்றுமில்லாத ஓர் உச்சநிலையை எட்டும் என்பதில் எள்முனையளவு கூட ஐயப்படத் தேவையில்லை. ஆளுநரின் இந்த உரையின் ஆழத்தையும், உள்ளடக்கத்தையும் புரிந்துகொள்ளாத எதிர்க்கட்சியினரின் விமர்சனம் உருப்படியான விமர்சனங்களாக அமையவில்லை.
எனவே அவர்களது “புலம்பல்களைப்” பற்றி மக்கள் கவலைப்படத் தயாராக இல்லை. “பொற்காலத் தமிழ்நாட்டை” விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணவிருக்கிறோம் என்பதற்கு கட்டியம் கூறும் உரைதான் தமிழ்நாட்டு ஆளுநர் உரை!
- பொன்.முத்துராமலிங்கம், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்.
நன்றி: முரசொலி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!