Tamilnadu

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயனாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும், கொரோனா மூன்றாவது அலை வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது குழந்தைகளை அதிகம் தாக்கும் எனவும் கூறப்படுகிறது.

எனவே ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல்கள், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்கப்பட்ட, பிறகு முதலமைச்சரின் ஆலோசனைப் பெற்று பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிது. மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்”எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “டெல்டா பிளஸ் வைரஸ்... தீவிரமாக கண்காணிக்க வேண்டும்”: மாவட்டங்களுக்குச் சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!