Tamilnadu

கல்வித் தொலைக்காட்சியை பார்க்ககோரி தண்டோரா போட்டு விழிப்புணர்வு செய்த தலைமையாசிரியர்.. குவியும் பாராட்டு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்தே பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இரண்டு வருடங்களாக இணைய வழியிலேயே பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு மட்டும் இணை வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது.

அதேநேரம், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாத சூழல் இருப்பதால், அனைவரும் தேர்ச்சி என மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருந்தபோது மாணவர்களின் கல்வி முற்றாகப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இணையவழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடம் எடுத்து வருகிறது. அதேபோல், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தி வருகிறது. இதில் வகுப்பு, பாடம் வாரியாக தேதி, நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், வெங்கடாசல புரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் வி.ரவிந்தினர். இவர் கல்வி தொலைக்காட்சியைப் பார்த்து மாணவர்கள் பயன்பெற வேண்டும் என வீதி வீதியாகத் தண்டோரா போட்டு சென்றது பெற்றோர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செங்கடாசலபுரம் கிராமத்தில் வீதி வீதியாக நடந்தே சென்று, கல்வி தொலைக்காட்சியில் எந்த எந்த நேரத்தில் என்ன வகுப்பு எடுக்கப்படுகிறது என்பது குறித்த துண்டு சீட்டை பெற்றோர்களிடம் கொடுத்து, கல்வித் தொலைக்காட்சியைப் பார்த்து மாணவர்கள் பயன்பெற வேண்டும் என தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறுகையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, கல்வித் தொலைக்காட்சியை மாணவர்களை அவசியம் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நானும், சக ஆசிரியர்களும் சேர்ந்து வீதிவீதியாக சென்று தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

மேலும், கல்வித் தொலைக்காட்சி அட்டவணை தொடர்பாக பெரிய அளவில் பிளக்ஸ் போர்டும் கிராமத்தில் வைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிச்சயமாகக் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்கச் செய்வோம் என உறுதியளித்தனர்” எனத் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “டெல்டா பிளஸ் வைரஸ்... தீவிரமாக கண்காணிக்க வேண்டும்”: மாவட்டங்களுக்குச் சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!