Tamilnadu
“பெட்ரோல் விலை டிசம்பருக்குள் 125 ரூபாய் அளவிற்கு செல்லலாம்” : ஒன்றிய அரசை எச்சரிக்கும் அரவிந்த் மிஸ்ரா !
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்திற்குப் போயிருக்கிறது. பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 8 மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்திலும் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானில் டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 19 காசுகளுக்கும், டீசல் 93 ரூபாய் 23 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவிலேயே இங்கும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட உள்ளது. ஆயினும் ஏற்கனவே ஒரு சில ஊர்களில் நூறு ரூபாயை தாண்டிவிற்கிறது.
அதுமட்டுமல்லாது, தற்போதைய சர்வதேச சந்தை விலைச் சூழல் நீடிக்கும் பட்சத்தில், இந்தியாவில் பெட்ரோல் விலை, 2021 டிசம்பருக்குள் 125 ரூபாய் அளவிற்கு செல்லலாம் என்று எண்ணெய் பொருளாதார நிபுணர் அரவிந்த் மிஸ்ரா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், “டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு முன்னரே, எண்ணெய் கொள்முதலில், வருவாய் ஏதும் இல்லாத நிலைதான் உள்ளது; தற்போது ரூபாய் மதிப்பும் சரிந்து, மறுபுறம் கச்சா எண்ணெய் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்வதால், பெட்ரோல் விலை 125 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு உண்டு” என்று அரவிந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: -
“சர்வதேச சந்தையில் ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலைகள் உயரத் துவங்கின. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை76 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2022-ஆம் ஆண்டில் கச்சா எண் ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களை எட்டும் என்று ‘பாங்க் ஆப் அமெரிக்கா’ மதிப்பிட்டுள்ளது.
மற்றொரு பெட்ரோல் ஏஜென்சியான கோல்ட்மேன் சாச்ஸ், கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதியில், ஒரு பீப்பாய் 80 டாலர் என்ற அளவை எட்டலாம் என்கிறது. சிஐடிஐ (CITI) 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான இலக்கை ஒரு பீப்பாய்க்கு 85 டாலராக உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவில் பொருட்களின் பணவீக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஓ.என்.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார்.
எனவே, மேலும் பணவீக்கத்திற்கு நுகர்வோர் தயாராக இருக்க வேண்டும், இப்போது விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்று சொல்வது கடினம். கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு, ஒபெக் (OPEC) நாடுகள் தங்களின் உற்பத்தியை குறைந்தது ஒரு முக்கியமான காரணம் என்றால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
ஈரான் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தக் கூடும். அதைத்தொடர்ந்து ஈரான் தனது எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் விலை சிறிது குறையலாம்.
ஆனால், இதுகுறித்து இரு நாடுகளின் அறிக்கைகளும் வேறாக உள்ளன. எனவே, எண்ணெய் உற்பத்தி - விநியோகம் உடனடியாக அதிகரிக்குமா என்பது இன்னும் சந்தேகத்திற்கு இடமான நிலையில்தான் உள்ளது. எனவே, தற்போதைக்கு கச்சா எண்ணெய் விலை குறைவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. 2021 டிசம்பருக்குள் அது 125 ரூபாய் அளவிற்குச் செல்லலாம்” இவ்வாறு அரவிந்த் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 ஜூன் மாதத்தில், கச்சாஎண்ணெய் விலை பீப்பாய்க்கு 40 டாலர் என்ற அளவில் இருந்தது.இன்று அதுபீப்பாய்க்கு 76 டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய் யப்படுகிறது. ‘ஒபெக்’ எண்ணெய் வள நாடுகள் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டம் ஜூலை 1 அன்று நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான எண்ணெய் உற்பத்தி தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த கூட்ட முடிவைப் பொறுத்துத்தான் எண்ணெய் விலை நிலவரங்களில் புதிய மாற்றங்கள் வரும்.
எண்ணெய் உற்பத்தி - விநியோகத்தை அதிகரிப்பது என்று முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை குறையலாம். அப்படியே விலை குறைந்தாலும், அதன் பலனை ஒன்றிய பா.ஜ.க அரசு மக்களுக்கு வழங்குமா? என்பது கேள்விக்குறிதான். இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச விலை நிலவரங்களைத் தாண்டி, ஒன்றிய அரசின் வரிக் குறைப்பு மட்டுமே பெட்ரோல் - டீசலின் விலையைக் குறைக்கும்.
தற்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 58 சதவிகிதமும், டீசல் விலையில் 52 சதவிகிதமும் வரியாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை சரிந்தபோது, கடந்த 2020 மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே பெட்ரோல் மீது 13 ரூபாயும், டீசல் மீது 16 ரூபாயும் கலால்வரி உயர்த்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த கலால் வரி பெட்ரோலுக்கு 32 ருபாய் 98 காசுகளும், டீசலுக்கு 28 ரூபாய் 35 காசுகளும் விலை உயர்ந்தது. இதில் மாநிலங்கள் விதிக்கும் வாட் வரி தனியாகும்.
லிட்டருக்கு ரூ. 4.50 குறைக்க முடியும்
ஒன்றிய அரசு நினைத்தால், எரிபொருட்களுக்கான வரியை லிட்டருக்கு 4 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்க முடியும் என்கிறார் ‘இக்ரா’ (ICRA) தலைமைப் பொருளாதார ஆலோசகர் அதிதி நாயர். அடுத்த 9 மாதங்களில் நுகர்வு அதிகரிக்கும் என்பதால், வரிக் குறைப்பால் ஏற் படும் இழப்பை சரிக்கட்டி விட முடியும். இவ்வாறு செய்வதன் நுகர்வோர்விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 10 சதவிகிதம் வரை குறையும். அது அன்றாட குடும்பச் செலவின நெருக்கடியிலிருந்து மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!