Tamilnadu

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது: போலிஸாருக்கு நன்றி கூறி பேனர் வைத்த கிராமம்!

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர். மேலும் இந்த அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான தாமரைச் செல்வன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகி நேரு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கூட்டாக ஆட்டுப்பணையில் அமைந்துள்ள தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளனர்.

இது குறித்து போலிஸாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து கடந்த 26ம் தேதி கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலிஸார் அந்த தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது மூன்று பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சிச் கொண்டிருந்தனர். மேலும் சாராய உறல்களில் 60 லிட்டர் வரை கள்ளச்சாராயம் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, போலிஸார் சாராய உறல்களை அழித்ததோடு 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய முருகேசன்,தாமரைக்கண்ணன், நேரு, ரகு ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்றிய போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளனர்.

போலிஸாருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் வைத்துள்ள பேனரில்,"இந்து முன்னணி என்ற பெயரில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் கே.சி.முருகேசன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மின்னவேட்டுவம்பாளையத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் மற்றும் நேரு ஆகியோர் மின்ன வேட்டும்பாளையத்தில் விஷ சாராயம் (கள்ளச்சாராயம்) தயாரித்து கொண்டிருந்தர்.

அப்போது, கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்றிய கோபி மதுவிலக்கு போலிஸாருக்கும் மற்றும் கவுந்தப்பாடி போலிஸாருக்கும் சவுந்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்"என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘சங்கறுத்துடுவேன்’ என சேலத்தில் போலிஸாரை மிரட்டி அவினாசியில் பதுங்கிய இந்து முன்னணி பிரமுகர் கைது!