Tamilnadu

"கொரோனாவுக்கான 2-DG மருந்து இன்னும் விற்பனைக்கு வராதது ஏன்?" : ஒன்றிய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி!

சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்திமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

பொது நல வழக்கு தொடுத்த சரவணன் தனது மனுவில், கொரோனா தொற்றைக் குணப்படுத்தும் வகையில் 2 டிஜி மருந்தை இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை சந்தைக்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி மருந்து உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும் சர்வதேச மருந்து மாஃபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதற்கு ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 டிஜி மருந்தை உற்பத்தி செய்வதற்கு 40 இந்திய நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனை குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார். மேலும் 2 டி.ஜி மருந்தால் 61 வயது முதியவர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி, அவரை சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அழைத்துப் பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.

Also Read: முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார்: கடுமையான ஆட்சேபம் எழுந்ததால் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி!