Tamilnadu

மேலும் 23 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்க அனுமதி... தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் கடந்த வாரம் முதல் பொதுப் போக்குவரத்தான அரசுப் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு அரசின் இன்றைய அறிவிப்பின்படி, வகை இரண்டிலுள்ள 23 மாவட்டங்களான அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வகை 1-ல் வகைப்படுத்தப்பட்டுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து நகைக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

* கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

வகை - 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

* அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும்.

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read: ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மாவட்ட வாரியாக தளர்வுகள்.. உங்கள் மாவட்டத்தில் எவற்றிற்கெல்லாம் அனுமதி?