கோப்புப்படம்
Tamilnadu

அரசு சார்பில் வீட்டிற்கே சென்று கோவிட் டெஸ்ட்; முழுமையான தடுப்பூசி பெற்ற கிராமம் - சுகாதார அமைச்சர் தகவல்

டெல்டா பிளஸ் தமிழகத்தில் பரவாமல் கட்டுப்பாடோடு இருப்பதில் கவனமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு. அதில் சுமார் 1 கோடியே 28 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றார். தற்போது சுமார் 8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இம்மாத இறுதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். அதேபோன்று தேயிலை தொழிலாளர்கள் அனைவருக்கும் போட்டு முடிக்கப்படும். சுற்றுலா தளங்கள் (நாகூர், வேளாங்கண்ணி, கோடியக்கரை) இருக்கும் இடங்களில் விரைவில் தடுப்பூசி போடப்படும்.

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 3,332 பேரில் 18 வயதிற்கு மேல் கர்ப்பிணி பெண்கள் என கண்டறியப்பட்ட 998 பேரை தவிர்த்து, மீதமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அந்த ஊரைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் உள்ள கிராமத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்படும். இதுவரை 40 மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை கொடுக்காத மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1296 மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டம் உள்ளது. இதுவரை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20,968 பேர் பயனடைந்து உள்ளனர். இதுவரை 423 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் தொடர்பாக 1159 பேருக்கு பெங்களூருவில் மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அங்கு ஒருவரைத் தவிர அனைவரும் நெகடிவ் ஆக தான் இருந்துள்ளது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். இருந்த போதிலும் அவருடைய பயண விபரம், அவர் யாருடன் பழகியுள்ளார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

71 லட்சம் தடுப்பூசிகள் ஜீலை மாதத்தில் மத்திய அரசு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 772 இடங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக அதிகப்படியானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வீட்டிற்கே சென்று கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான சோதனை முறை நடைபெற்று வருகிறது. தேவைப்படும் நேரத்தில் அந்த பரிசோதனையை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

Also Read: தமிழ்நாட்டில் நுழைந்த டெல்டா ப்ளஸ் வகை கொரோனா : சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு - சுகாதார செயலாளர் தகவல்!