Tamilnadu
“அடுத்த தலைமுறையினரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர்” - விவசாயிகள் நெகிழ்ச்சி!
எட்டுவழிச் சாலை, வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.
இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் வைத்த வாதம், எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.
அப்போது, எட்டுவழிச்சாலை உள்ளிட்ட ஒன்றிய அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
“கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்திய குடியுரிமைச் சட்டம், எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளும், கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு சேலம் சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
சேலம் அருகே உள்ள பூலாவரி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தன்னை விவசாயி என்று சொல்லிக்கொண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த துடித்துக் கொண்டிருந்தார்.
பல்வேறு சமயங்களில் அவரை சந்தித்து மனு அளிக்க முயற்சித்தும் விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெறவில்லை. இந்த திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்கியதோடு, எங்கள் மீது வழக்கு பதிவு செய்து அலைக்கழித்தார்.
ஆனால் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் நலனில் அக்கறையுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தெய்வமாகவே பார்க்கின்றனர். அவர் வாழ்நாள் முழுவதும் முதலமைச்சராகவே நீடிக்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். எங்களது அடுத்த தலைமுறையினர் அனைவரும் முதலமைச்சருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்