Tamilnadu

“தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம் என முரசறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - கி.வீரமணி பாராட்டு!

‘ஸ்டாலின்தான் வாராரு; விடியல் தரப் போறாரு!’ தேர்தல் நேரத்தில் பாடப்பட்ட இப்பாடல் செயல்வடிவம் கொண்டு பூத்துக் குலுங்குகின்றது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள உணர்ச்சிபூர்வ அறிக்கை வருமாறு:

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தி.மு.க அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடக்கத்தின் ஆளுநர் உரையின் கொள்கைப் பிரகடனங்கள், அகிலத்தின் ஆழ்ந்த கவனத்திற்கும், வியந்த பெருமைக்குரியதாகவும், பலதரப்பட்டவர்களாலும் பாராட்டப்படுகிறது.

புதிய தி.மு.க அரசுக்குப் பெரும் சவாலாய் அமைந்துள்ளது!

முந்தைய அ.தி.மு.க. அரசின் இலக்கு இல்லாத திட்டங்களாலும், அரசு நடவடிக்கைகள், கடன் சுமையும், வட்டிப் பளுவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் கீழிறக்கத்திற்கும் அழைத்துச் சென்றுள்ளது. ‘கஜானா காலி’ என்ற அளவில் மட்டுமல்ல, வட்டி கட்டவே புதுக் கடன்களில் பெரும்பகுதி என்ற மோசமான நிதி நிலையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தி.மு.க அரசுக்குப் பெரும் சவாலாய் அமைந்துள்ளது!

இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, ஆளுநர் உரையில் பல சிறந்த தீர்வுகளைக் காண முறையான ஏற்பாடுகளை தொலைநோக்குச் சிந்தனையுடன், தமிழ்நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுடன், வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் எப்படி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், பின்பற்றத்தக்க மாநிலமாகவும் ஆக்கவேண்டும் என்ற முடிவுடன், உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களையும், ஆளுமை அனுபவம் மிக்கோரையும் கொண்டு ஐவர் குழுவை தனது பொருளாதார ஆலோசனை அறிவுரைக் குழுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நல்லாட்சியாக தொடங்குகிறது என்பதற்கு முதல் அடையாளம்!

தி.மு.க. ஆட்சி நல்லாட்சியாக தொடங்குகிறது என்பதற்கு முதல் அடையாளம் இது.

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல் (குறள் 446)

‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்ற தலைப்பில் உள்ள மேலே காட்டியுள்ள குறளின் பொருள் இதோ:

‘‘ஆட்சித் தலைவன், தக்க அறிவுடையோர் கூட்டத்தை உடன் கொண்டிருப்பவனாய் இருந்து, தானும் அறிவுத் திறனோடு ஒழுக வல்லானாய் அமைந்தால், அவனுக்குப் பகைவர்கள் செய்யக்கூடிய துன்பம் ஏதொன்றும் இல்லை’’ என்பதேயாகும்.

வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கிட...

மாநில கொள்கை வழிகாட்டும் குழு, வளர்ச்சிப் பாதையில், வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கிட, பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையிலான அறிஞர் குழுவின் (முந்தைய மாநில திட்டக்குழு) நியமனமும், இப்போது ஆளுநர் உரை அறிவிப்பும், மாநில நிதிநிலை பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடும் திட்டமும் ‘‘நோய் நாடி நோய் முதல் நாடும்‘’ அருமையான அறிவியல் அணுகுமுறையாகும்!

இதுவரை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண் துறையில் ஒரு புத்தெழுச்சியையும், புதுத் திருப்பத்தையும் ஏற்படுத்தி, உழவர் நலம் காக்கும் வகையில், வேளாண்மைக்கென தனி பட்ஜெட் (தனி வரவு - செலவுத் திட்டம்) ஒவ்வொரு ஆண்டும் வரும் என்ற தி.மு.க ஆட்சியின் அறிவிப்பு - உழவர்களின் கண்ணீரைத் துடைத்து, புத்தாக்கத்தையும், வாழ்வின் மறுமலர்ச்சியையும் அவர்களுக்கு ஏற்படுத்துவது உறுதி! சமூகநீதி 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அனைவருக்கும் அனைத்தும்’, ‘எல்லாருக்கும் எல்லாம்’ - இந்த இரண்டே சொற்களும், ‘ஸ்டாலின்தான் வாராரு; விடியல் தரப் போறாரு’ என்று தேர்தல் நேரத்தில் சிறார் முதல் பெரியவர் வரை பட்டிதொட்டிகளில் எல்லாம் பாடப்பட்ட பாடலும் செயல்வடிவம் கொண்டு பூத்துக் குலுங்குகின்றன!

சமூகநீதி மட்டுமல்ல, திராவிடர் ஆட்சியின் அடித்தளம் உறுதியாக உள்ளது என்பதைக் காட்ட ‘‘தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளங்கள் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது’’ என்பதையும்,

‘‘திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தை செதுக்கிய சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்தளித்த பாதையில் தொடர்ந்து பீடுநடை போட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்!

இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்று உயர்த்திக் காட்டுவோம்!’’ என்பதையும் ஆளுநர் உரை வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசறைந்துள்ளார்!

முதலமைச்சரைப் பாராட்டிப் பேச, எழுத போதிய சொற்கள் மேலும் தேவை!

என்னே உவகை! உவகையாலே பூரிக்கிறோம்! இவ்வளவு ஆற்றல்மிகு ஆளுமையான முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும், அதற்கு ஒத்துழைப்புத் தர உடனுக்குடன் உதவும் தக்க அதிகாரிகளும் கொண்ட - ‘தக்கார் இனத்தானாய் தான் ஒழுக வல்லாரை’’க் கொண்ட முதலமைச்சராக நாளும் செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டிப் பேச, எழுத போதிய சொற்கள் மேலும் தேவை!

இவ்வளவும் செய்து அடக்கமாகவும், அமைதியாகவும், ஆர்ப்பரிப்பு எதுவுமின்றி ‘என் கடன் நாளும் பணி செய்து, எம் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதே!’ என்று உறுதி பூண்டு, ஓய்வறியா முதலமைச்சராக உழைக்கிறார்.

45 நாள்களில் ஞாலமே அவர் வயப்பட்டு மூக்கின்மேல் விரல் வைத்து வியக்கிறது; நாம் பூரிக்கிறோம்! புளகாங்கிதத்துடன் போற்றுகிறோம்!"

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “பிரதமர் மோடி செய்யாததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்கிறார்” : ‘The Telegraph’ ஆங்கில நாளேடு புகழாரம்!