Tamilnadu

“ரயிலில் பிச்சையெடுத்து கேமரா வாங்கினேன்... இன்று பத்திரிகை புகைப்படக்காரர்” - அசத்தும் திருங்கை சோயா!

மும்பை ரயில்களில் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்திவந்த திருநங்கை இன்று, தனது உழைப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை பத்திரிகை புகைப்படக்காரராக மாறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் திருநங்கை சோயா தாமஸ் லோபோ. திருங்கையான சோயா, வீட்டை விட்டு வெளியேறி மும்பை ரயில்களில் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

ஆனால் தற்போது ஒரு பத்திரிகையின் புகைப்படக்காரராக வலம் வருகிறார். இதுதொடர்பாக திருங்கை சோயா தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “என்னுடைய 5வது வயதில் எனது தந்தை இறந்துவிட்டார்.

பின்னர் தாயின் வளர்ப்பில் வளர்ந்த நான், 17 வயதாகும்போது திருநங்கை என்பதனை உணர்ந்து வீட்டைவிட்டு வெளியேறி, திருநங்கையர் அமைப்புடன் என்னை இணைத்துக்கொண்டு ரயில்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்தேன். முக்கிய விழாக் காலங்களில் ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை சம்பாதிப்பேன். மற்ற நாட்களில் சாப்பிட கூட உணவு இருக்காது. அப்படி இருக்கையில் எனக்கு புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வத்தில் ரயில்களில் புகைப்படம் எடுப்பேன். அதன்பிறகு உணவுக்கு காசு இல்லையென்றாலும் பரவாயில்லை என்று எனக்கு வரும் பணத்தில் பெரும் பகுதியை சேமித்து வைத்துள்ளேன்.

பின்னர் சேகரித்து வைத்திருந்த ரூ.30,000 பணத்தில் பழைய கேமரா ஒன்றை விலைக்கு வாங்கி , சிறந்த புகைப்படங்களை எடுத்து வந்தேன். அதன்பிறகு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நான் எடுத்த வீடியோக்களை அந்த சேனலில் பதிவிடுவேன். என் கேமரா மூலம் எடுத்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்தது.

அதன்பின்னர் எனது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது பத்திரிகை நிறுவனம் ஒன்று என்னை புகைப்பட பத்திரிகையாளராக தேர்வு செய்து பணிக்கு அமர்த்தி உள்ளது. இப்போது, நான் ஒரு பத்திரிகை புகைப்படக்காரர். தினமும் காலையில் எழுந்து நிறைய புகைப்படங்களை எடுப்பேன்.

மாலையில் அலுவலகத்திற்கு சென்று ஒப்படைப்பேன். தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். நீங்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், விடாமுயற்சியுடன் உழைப்பைக் கொடுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "பிரதமரின் அழுகை உயிர்களைக் காப்பாற்றவில்லை.. ஆனால் ஆக்சிஜன் காப்பாற்றியிருக்கும்" - ராகுல் காந்தி சாடல்!